நேற்று முதல் சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.11.42 உயர்ந்தது

           புதுடெல்லி: காஸ் சிலிண்டர் டீலர்களுக்கான கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதையடுத்து, நேற்று முதல் சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.11.42 உயர்ந்தது. இது போல் பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறது. பெட்ரோலிய பொருட்களான பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றின் மீதான மானியத்தை குறைக்க மத்திய அரசு அதிரடி முடிவெடுத்துள்ள நிலையில் தொடர்ந்து அவற்றின் விலைகள் மாறியபடியே உள்ளன.   பெட்ரோல் விலையை தொடர்ந்து  உயர்த்தி வந்த  நிலையில், சமீபத்தில் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியது. மானியத்தை  அடியோடு ஒழித்து கட்டி, சந்தை விலைக்கு இவை நிர்ணயிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இதனால் ஏறுமுகம் தான் இனி. இந்த நிலையில், டீலர்களுக்கான கமிஷன் விஷயத்தில் அரசு தடாலென முடிவு எடுத்துள்ளது. இதனால், காஸ் சிலிண்டர் விலை 11 ரூபாய் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் காஸ் சிலிண்டர் டீலர்களுக்கு 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டருக்கு ரூ.25.83 கமிஷனாக வழங்கப்பட்டு வந்தது. இந்த கமிஷன் தொகையை 44% அதாவது ரூ.11.42 உயர்த்த பெட்ரோலியத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. எனவே டீலர்களுக்கு இனிமேல் ஒரு சிலிண்டருக்கு ரூ.37.25 கமிஷனாக வழங்கப்படும். இந்த உயர்வு மானிய சிலிண்டரின் விலையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் வாடிக்கையா ளர்களுக்கு ரூ.399க்கு வழங்கப்பட்டு வந்த 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் இனி ரூ.410.42 க்கு வழங்கப்படும்.

 14.2 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் ரூ.1,062 க்கும், 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் ரூ.1,536.50க்கு விற்கப்படும்.மானியம் அல்லாத காஸ் சிலிண்டருக்கான கமிஷன் ரூ.12.17 உயர்த்தப்பட்டு ரூ.38 ஆக வழங்கப்படுகிறது. இதன்படி மானியம் அல்லாத சிலிண்டரின் விலை ரூ.883.50 லிருந்து ரூ.921.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இதே போல் 5 கிலோ எடையுள்ள சமையல் காஸ் சிலிண்டர்களுக்கான கமிஷன் தொகை ரூ.5.33 உயர்த்தப்பட்டு ரூ.18.63 ஆக வழங்கப்படுகிறது. சமையல் காஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடுகள் விதித்த ஒரு சில வாரத்துக்குள், காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பெட்ரோல் பங்க் டீலர்களும் தங்களுக்கான கமிஷனை உயர்த்தி தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ள னர். தற்போது பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு லிட்டர்  பெட்ரோலுக்கு ரூ.1.49ம், டீசலுக்கு லிட்டர் 91 காசும் கமிஷனாக வழங்கப்படுகிறது.  பெட்ரோல் பங்க்குகள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படுவதாலும், வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு இலவச ஏர், டாய்லெட் போன்ற வசதி செய்து தருவதாலும், மின் கட்டணம் உட்பட இதர செலவினங்கள் அதிகரித்ததாலும், எரிபொருள் ஆவியாவதால் ஏற்படும் இழப்பை சரிகட் டவும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கமிஷனை ரூ.2.10 ஆக உயர்த் தவும், ஒரு லிட்டர் டீசலுக்கான கமிஷனை ரூ.1.33 ஆக உயர்த் தவும் பெட்ரோல் பங்க் டீலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வழங்கப்படும் கமிஷனை 23 பைசா உயர்த்தி ரூ.1.72 ஆக வழங்கவும், ஒரு லிட்டர் டீசலுக்கான கமிஷனை 10 பைசா உயர்த்தி ரூ.1.01 ஆக வழங்கவும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.                

                                                                                                                               -பசுமை நாயகன்.