ஜெயலலிதா உத்தரவு - சென்னை மக்களுக்கு தரமான சாலை, குடிநீர்

      

     சென்னையில் அனைத்துப் பகுதிகளுக்கும் தரமான குடிநீர் கிடைப்பதற்கு வசதியாக, பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திற்கு 189 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இந்த நிதியில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 35 ஜெட்ராடிங் இயந்திரங்களும், 50 தூர் வாரும் இயந்திரங்களும் வாங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பெருநகர வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 280 கிலோ மீட்டர் தூர சாலைகளை மேம்படுத்த 366 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் பழைய பகுதியைப் போலவே, புதிதாக இணைந்த பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையை சிறப்புடன் செயல்படுத்துவதற்கான வசதிகளுக்காக 42 கோடியே 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தற்போதுள்ள 7 குப்பை மாற்று நிலையங்களுடன் கூடுதலாக 6 குப்பை மாற்று நிலையங்கள் 18 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக தலைமைப் பொறியாளர் பதவி உள்பட 784 புதிய பணியிடங்களை உருவாக்கவும், நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருக்கும் 2 ஆயிரத்து 405 பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், சென்னை மாநகர மக்களுக்கு தரமான சாலை, குடிநீர், கழிவு நீரகற்றும் வசதி, திடக்கழிவு மேலாண்மை வசதி போன்றவை கிடைக்கும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.