வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்காவில் பெரும் பாதிப்பை சாண்டி புயல் ஏற்படுத்தியிருக்கிறது.

    மெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இன்று கரையைக் கடந்த அதிவேக சாண்டி புயலுக்கு 14 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்காவில் பெரும் பாதிப்பை இந்தப் புயல் ஏற்படுத்தியிருக்கிறது.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இந்த அதிவேகப் புயல், கரீபியன் நாடுகளைத் தாக்கிவிட்டு இப்போது அமெரிக்காவில் கரையைக் கடந்திருக்கிறது. இந்தப் புயல் காரணமாக அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்வதுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது.  முக்கிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. சுரங்கப் பாதைகள், பாலங்கள் போன்றவற்றிலும் வெள்ள நீர் புகுந்திருக்கிறது. இதனால், புரூக்ளின் மற்றும் மன்ஹாட்டன் ஆகிய நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  இந்த நீரை வெளியேற்றுவதற்கு இன்னும் சில நாள்கள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
நியூயார்க் பங்குச் சந்தை மூடல்
உலகின் முக்கிய பங்குச் சந்தையான நியூயார்க் பங்குச் சந்தை இரண்டாவது நாளாக இன்றும் இயங்கவில்லை. கடந்த 125 ஆண்டுகளில் மோசமான வானிலை காரணமாக  தொடர்ந்து இரண்டு நாள்கள் நியூயார் பங்குச் சந்தை மூடப்படுவது இதுவே முதல் முறையாகும். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அங்கிருந்த சுமார் 200 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அணு உலைக்குள் நீர் புகுந்தது
நியூஜெர்சியிலும் புயலின் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. அங்குள்ள மிகப் பழமையான ஓயிஸ்டர் கிரீக் அணு மின் நிலையத்துக்குள் கடல் நீர் புகுந்திருப்பதால், அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக சுமார் 5 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், பராக் ஒபாமாவும், மிட் ராம்னியும் தங்களது தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்திருக்கின்றனர்.