ரிசர்வ் வங்கி பூஜ்ஜியம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் குறைத்துள்ளது.

    சிஆர்ஆர் எனப்படும், வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி பூஜ்ஜியம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் (0.25%) குறைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டாம் காலாண்டு நிதிக்கொள்கை மறுஆய்வுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதன் முடிவில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுனர் சுப்பாராவ், சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதம் குறைக்கப்பட்டாலும், ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ எனப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றார்.
கூடவே, எஸ்எல்ஆர் எனக் குறிப்பிடப்படும் STATUTORY LIQUITITY RATIO அதாவது இந்திய வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பான மற்றொரு முக்கிய அம்சத்திலும் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்றார். சிஆர்ஆர் குறைப்பால், ரிசர்வ் வங்கியில் தற்போதுள்ள வங்கிகளின் நிதியில் இருந்து, கூடுதலாக 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வர்த்தக வங்கிகளின் பயன்பாட்டுக்கு கிடைக்கும்.
இதன்மூலம் வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழிற் கடன், விவசாயக்கடன் போன்றவற்றை அதிக அளவில் வழங்குவது வங்கிகளுக்கு சாத்தியமாகும். மேலும், வங்கிகள் தாங்களாகவே முடிவு செய்து, சில பிரிவு கடன்களுக்கு வட்டிக் குறைப்பு செய்யவும் வாய்ப்பு உள்ளது.
இதுதவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறித்த கணிப்பை ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்த 6.5 சதவீதத்திலிருந்து, 5 புள்ளி 8 சதவீதமாக குறைத்துள்ளது. அதேபோல, நடப்பாண்டு முடிவில் பணவீக்க வீதம் குறித்த கணிப்பை 7 சதவீதத்திலிருந்து 7 புள்ளி 5 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.