அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் அரசு பேருந்து ஊழியர்களுக்கும் இடையே மோதல்

      சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் அரசு பேருந்து ஊழியர்களுக்கும் இடையே நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயமடைந்தனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, நேற்று விடுதிக்கு திரும்பினர். அப்போது மாணவர்கள் பயணச்சீட்டு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நடத்துனருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது மாணவர்களுக்கும் அரசு பேருந்து ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் ஆல்வின்,  நடத்துனர் லிவின் குமார்  மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பேருந்து ஊழியர்களைத் தாக்கிய சட்டகல்லுரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால், பிரச்னை பெரிதாகாமல் தடுக்க ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.