டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் சமீபத்திய நடத்திய ஆய்வில் செல்போன்களால் டி.என்.ஏ பாதிப்பு ஏற்படுவதும்

        விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது விவரிக்க முடியாத புரட்சி! அறிவியலின் துணை கொண்டு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனிதன் நடத்தி வரும் சாதனைகள் சாதாரணமானவையல்ல. ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத பதிவுகளாக மாறி வருகின்றன. ஒவ்வொரு புதிய புதிய கருவிகளை கண்டு பிடிக்கும் போதும், அதனை பயன்படுத்தும் போதும் கிடைக்கும் வசதியும், வாய்ப்பும், புதியஅனுபவமும் மனிதனை புதிய யுகத்திற்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறது.
இதுபோலவே அறிவியல் வளர்ச்சியின் அற்புதமான கண்டுபிடிப்பான தொலைபேசியின் புதிய அவதாரம் செல்போன்களாகும். கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொடர்பு துறையில் புதிய சரித்திரம் படைத்துள்ளது செல்போன்கள். இந்தியாவில் செல்போன்கள் பயன்பாட்டிற்கு வந்த போது, முதலில் அது வசதி படைத்தவர்களின் சாதனமாகவே இருந்து வந்தது. ஆனால் அதன் பயன்பாட்டின் சிறப்பை மனிதன் உணரத் தொடங்கியதும், செல்போனுக்கான செலவு குறைந்து வருவதும் அதன் மீதான மனிதனின் ஈர்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
செல்போன் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. உடன் யாராவது இருக்கிறார்களாக இல்லையா என்பதை விட செல்போன் இருப்பது அவசியமாகி போனது. கழிவறைக்கு கூட செல்போனுடன் செல்பவர்கள் இன்று அதிகம். செல்போன்கள் தற்போது பலருக்கு உடலுடன் ஒன்றிப்போன உறுப்பாகவே மாறி விட்டது. இதனால் தான் செல்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தற்போது சுமார் 35 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் செல்போன்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நம்நாட்டில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதுபோலவே செல்போன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன் தொழிலில் கொழிக்கும் பணத்தால் இதில் பல தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டு வருகின்றன. இதனால் குக்கிராமங்களில் கூட செல்போன் டவர்கள், செல்போன் பயன்படுத்த தேவைப்படும் கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மொத்ததில் எங்கு காணினும் செல்போனடா என்ற நிலை தான் காணப்படுகிறது.
எனினும் எந்த ஒரு தொழில்நுட்பத்திலும், வசதி எந்தஅளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பாதிப்பும் இருக்கவே செய்கிறது. அந்தவகையில் செல்போன்கள் மனித குலத்தை அச்சுறுத்தும் பொருளாகவும் இன்று செல்போன்கள் உருவெடுத்து வருகின்றன.
செல்போன்களில் இருந்து வெளிப்படும் ஒலி அலைகள், கதிர் வீச்சும் மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செல்போன்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஒலி அலைகளால் பெருமளவு பாதிப்பு ஏற்படுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஒலி அலைகள் நேரடியாக மூளையை தாக்குவதால் அதன் செயல்பாடுகளும், வளர்ச்சியும் முடங்கிப்போவதாக கூறப்படுகிறது.
எனவே செல்போன் மூலம் பேசுவதை கூடிய அளவில் குறைத்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகளுக்கு  செல்போன்களை பழக்குவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். கருவுற்ற பெண்கள் செல்போன்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
செல்போன்களில் இருந்து வெளி வரும் ஒலி அலைகள் நேரடியாக மூளையைச் சென்று தாக்கவல்லது. அதுமட்டுமின்றி அந்த ஒலி அலைகள் கருவுற்றிக்கும் குழந்தைகளையும் பாதிப்படை செய்யும். குழந்தையின் வளர்ச்சி, அதன் மன அமைதி போன்றவை பாதிக்க வாய்ப்பு உள்ளது. செல்போன்களில் இருந்து வரும் கதிர்களால் மூளையில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மூளையின் செயல்திறன் குறைவதால் மன வளர்ச்சி கூட பாதிக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமன்றி சிந்திக்கும் திறனும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
செல்போன் டவர்களால் மனிதர்களுக்கு பெரும் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த டவர்களை சுற்றியுள்ள சில கிலோ மீட்டர் தொலைவுக்கும் கூட கதிர்களின் வீச்சு உள்ளது. இதனால் தான் நகர்புறங்களில் குருவிகள் இனமே அழிந்து விட்டது. குருவிகள் மட்டுமின்றி வேறு சில பறவை இனங்களும் செல்போன் டவர்களால் அழிந்து வருகின்றன.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் சமீபத்திய நடத்திய ஆய்வில் செல்போன்களால் டி.என்.ஏ பாதிப்பு ஏற்படுவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. செல்போன் கதிர் வீச்சை எலிகள் மீது செலுத்தி ஆய்வு செய்த போது அவற்றின் மரபணுக்கள் சிதைந்து வருவது உறுதியாகியுள்ளது. மரபணுக்கள் சிதைவதால் பல நோய்கள் வருவதுடன், மனித குலத்தின் பண்புகள், செயல்பாடுகள், குணநலன்கள் என அனைத்தும் சிதறும் பேராபத்து உள்ளது.
செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவால் நமது நாட்டில் செல்போன்களால் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன் முறையாக நாடுமுழுவதும் விரிவானஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. ஒரு நாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக செல்போன் பேசும் ஆண்கள், 4 மணி நேரத்திற்கும் குறைவாக செல்போன் பேசும் ஆண்கள், செல்போன்களை பயன்படுத்தாத ஆண்கள், 4 மணிநேரத்திற்கும் அதிகமாக செல்போன் பேசும் பெண்கள், செல்போன்களை பயன்படுத்தாத பெண்கள் என 5 குழுவினராக பிரித்து அவர்களுக்கு செல்போன்களால் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை  சோதனை செய்து கண்டறியப்பட்டு வருகிறது.
செல்போன்கால் நரம்பியல் பாதிப்பு, ரத்தத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, விந்தணுக்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என அனைத்து வகையான பாதிப்புகளையும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் முடிந்தால் இந்தியாவில் செல்போன்களின் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் செல்போன்கள் இன்று அணு உலைகளுக்கு நிகராக மனித குலத்தை அச்சுறுத்தி வருவதாகவே நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர். செல்போன், மனிதனுக்கு அத்தியாவசியப் பொருள் தான் என்றாலும் ஆபத்தை கருதி பயன்பாட்டை குறைத்துக் கொள்ளலாமே! நீண்ட நேரம் பேசி தகவல் பறிமாறுவதாக இருந்தால் ‘லேண்ட்லைன்’ போனை பயன்படுத்தலாம். கூடிய அளவில் குறைத்துக் கொள்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.