மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: டெல்லியில் தொடரும் போராட்டம்

              டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து இன்றும் அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா கேட், ஜந்தர் மந்தர், விஜய் சவுக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பல்வேறு இடங்களில் சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தடைகளை மீறி மாணவர்கள் குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி முன்னேறிச்செல்ல முயன்றபோது அவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போலீஸார் கலைத்தனர்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக யோகா குரு ராம்தேவும், தனது ஆதரவாளர்களுடன் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். இதே போல், முன்னாள் ராணுவ தளபதி விகே.சிங்கும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இதனிடையே, மாணவர்கள் அமைதி காக்குமாறு மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் கேட்டுக்கொண்டுள்ளது.அதே நேரத்தில், போராட்டக்குழு பிரதிநிதிகள் சிலர், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் ஆகியோரை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.என்.சிங், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் தினமும் நடத்தி விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், இதற்கு காலவரையறை நிர்ணயிக்க முடியாது என்றும், நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள மாணவ பிரதிநிதிகள், போராட்டத்தை அமைதியாக நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
-ஹாட் ஸ்பாட் நரேஷ்