வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நாள் முதல் மரணத்தை சந்தித்த நாள் வரை

மருத்துவ மாணவி டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நாள் முதல் மரணத்தை சந்தித்த நாள் வரையிலான நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு:
        ணியிடைப் பயிற்சிக்கான டெல்லி சென்ற 23 வயது ஃபிசியோதெரபி மாணவி டிசம்பர் 16 ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்றார்.  6 பேர் கொண்ட கும்பலால் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த கும்பல் மாணவி மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதலும் நடத்தியது. பின்னர் பேருந்தி்ல் இருந்து இருவரும் வெளியே தள்ளிவிடப்பட்டனர். இருவரும் சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டிசம்பர் 17 ஆம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக , 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. மேலும் மாணவி சம்பவத்திற்கு நீதி கேட்டு, ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே டிசம்பர் 18 ஆம் தேதி இரவு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவமனைக்குச் சென்று மாணவியின் உடல் நலன் குறித்து விசாரித்தார். உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
டிசம்பர் 20 ஆம் தேதி பீகாரில் பதுங்கியிருந்த ஐந்தாவது குற்றவாளி தாகூர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 21 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி, சப்தர்ஜங் மருத்துவமனையில் உதவி கோட்ட மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார். அன்றைய தினம் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, குடியரசுத் தலைவர் மாளிகை முன்பாக ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அன்று முதல் நாள்தோறும் டெல்லியில் போராட்டம் அரங்கேறி வந்தது.
டிசம்பர் 22 ஆம் தேதி, பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 6வது குற்றவாளி பீகாரில் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 23 ஆம் தேதி டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மாணவர்களை நள்ளிரவில் சோனியா காந்தி சந்தித்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பாக, காவல்துறை உதவி ஆணையர்கள் இரண்டு பேர் டிசம்பர் 24ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதேநாளில் மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், முதன் முறையாக விளக்கம் அளித்தார்.
டிசம்பர் 25ல், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தின் போது காயம் அடைந்த காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் உடல் நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக 26 ஆம் தேதி இரவு சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அடுத்த நாள் காலை முதல் , மாணவிக்கு தீவிர சிகிச்சை தொடங்கியது. அளிக்கத் தொடங்கினர் மருத்துவர்கள்.
டிசம்பர் 28ஆம் தேதி மாணவியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவியின் உயிர் டிசம்பர் 29 ஆம் தேதி பிரிந்தது.
-ஹாட் ஸ்பாட் நரேஷ்