மழை ஏமாற்றியதால் சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது

       சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகள் நிவர்த்தி செய்து வருகிறது. இவை தவிர ஆந்தராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீரும், வீராணம் ஏரியில் இருந்து எடுக்கப்படும் குடிநீரும் சென்னை நகர மற்றும் புறநகர், புதிதாக இணைக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
 
தென்மேற்கு பருவ மழையால் எந்த பலனும் கிட்டாத நிலையில் வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழையும் போதுமான அளவிற்கு கிடைக்காததால் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.
 
பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், செங்குன்றம் ஏரிகளில் நீரின் இருப்பு குறைந்து வருகிறது. பருவ மழை காலமும் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் சூழ்நிலையில் ஏரிகள் தண்ணீர் இருப்பு குறைந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
 
வீராணம் ஏரியில் இருந்து வரும் தண்ணீரின் அளவும் 500 கன அடியாக குறைந்துவிட்டது. ஆனால் தற்போதைக்கு கிருஷ்ணா நீர் ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து தினமும் 200 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு வருவதால் சென்னை குடிநீர் ஏரிகளில் நீரின் இருப்பு குறையாமல் இருப்பதாக அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
 
கிருஷ்ணா நதி நீர் தொடர்ந்து இதே அளவு கிடைத்தால் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்புகிறார்கள். மே மாதம் வரை தற்போது உள்ள குடிநீர் மூலம் சமாளிக்கலாம். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித் தனர். பருவமழை பொய்த்தால் 2003-04-ம் ஆண்டில் சென்னையில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. அதுபோன்ற நிலை ஏற்படாது என்று அதிகாரிகள் திட்ட வட்டமாக கூறுகின்றனர்.
 
2004-ல் தண்ணீர் பற்றாக்குறை உண்டான போது கண்டலேறு அணையில் தண்ணீர் இருப்பு இல்லை. ஆனால் தற்போது 204 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அதனால் கிருஷ்ணா நதிநீர் நமக்கு தாராளமாக கிடைக்கும் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறியதாவது:-
 
சென்னை நகருக்கு நாள் ஒன்றுக்கு 831 மில்லியன் கன அடி தண்ணீர் தற்போது வினியோகம் செய்யப்படுகிறது. பைப் மற்றும் லாரிகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், செங்குன்றம் ஆகிய நான்கு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 5300 மில்லியன் கன அடியாக தற்போது உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து தற்போது 500 கன அடி தண்ணீர் வருகிறது.
 
அவற்றை 1000 கன அடியாக அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கிருஷ்ணா நீர் தொடர்ந்து வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. மே மாதம் வரை சமாளிக்கலாம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
-பூமித்ரா சுரேஷ்