அகத்தில் அழகு…புறத்தில் பூர்வகுடிகள்…

       சென்னை என்றால் நம் நினைவுக்கு வருவது ஆடம்பரமான மாளிகைகளும், நாகரீகமான மனிதர்களும்….ஆனால் இந்த நகரை உருவாக்கியவர்கள் யார் ? அவர்கள் தற்போது எங்கு வசிக்கிறார்கள்? என்ற கேள்விகளெல்லாம் நம் மனதில் எழுவதில்லை….இனி அப்படி ஒரு கேள்வி எழுந்தால், சைதாப்பேட்டை, அடையாறு, கீர்ம்ஸ் சாலை,புதுப்பேட்டை போன்ற பகுதிகள் வழியாக செல்லும் போது சாலை ஓரங்களில் உள்ள குடிசைகளை எட்டி பாருங்கள்…ஆம் அவர்கள் தான் சென்னையின் பூர்வகுடிகள். நகரின் பெருக்கத்தாலும் நாகரீகத்தின் வளர்ச்சியாலும் அழுக்கு மனிதர்கள் என ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு கடைசியாக கூவத்தின் கரையோரங்களை தங்களின் வாழ்விடமாக மாற்றிக்கொண்டு வாழும் ஆதிமனிதர்கள்…
இன்று இவர்களின் அடிமடியில் கை வைக்கிறது தீ விபத்துக்கள்….ஏனோ தெரியவில்லை குடிசைகள் எரியும் இடங்களில் எல்லாம் சில மாதங்களில் பெரிய பெரிய மாளிகைகள் முளைக்கின்றன….சரி விஷயத்திற்கு வருவோம்…

சென்னை மூர் மார்க்கெட்டில் 1985ம் ஆண்டு குடிசைப் பகுதியில் ஏற்பட்ட விபத்து தான் குடிசைப் பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தாக இருக்கிறது. தீ விபத்துக்களுக்கு பின்னால் ஒரு வகையான சதி இருப்பதாகவே பெரும்பான்மையின் குரல் ஒலிக்கிறது.

  என்ன சதி ? எதற்கு தீ ? வளரும் நகரமான சென்னை தன்னுள்ளே வளர்ச்சியை கூட்டிக்கொள்ள இடம் அவசியமாகிறது. எங்கிருந்து எடுப்பது இடம் என யோசித்தால் முதலில் அதிகார வர்க்கத்தின் கண்ணில் படுவது குடிசைப் பகுதிகளே… பிடிக்கும் தீ அனைத்தும் சதி தான் என்று நாம் வாதாடவில்லை, ஆனால் தானாக ஏற்படும் தீ விபத்துக்கள் குறைவே என்பது தான் எதார்த்தம். சற்று உற்று நோக்கினால் சென்னையில் குடிசை தீ விபத்துக்கள் சொல்லி வைத்தார் போல் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் தான் நிகழ்கின்றன.
வளர்ச்சி திட்டங்களுக்காகவோ வர்த்தக காரணங்களுக்காகவோ இடங்களை கையகப்படுத்துவது என்பது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். ஆனால் அரசு நிர்வாகம் இதனை பெரும்பாலான நேரங்களில் கருத்தில் கொள்வதில்லை.இதன் சமீபத்திய உதாரணங்களில் ஒன்று தான் விருதுநகரில் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தீக்குளித்து உயிர் நீத்தார்.

  இது போன்ற காலி செய்யும் பணிகளில் சில விதீமீறல்களும் நிகழ்கின்றன. பெரும்பாலும் உள்ளூர் பிரமுகர்களிடமே இது போன்ற பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. சில அரசு அதிகாரிகள் கூட இது போன்ற வேலைகளை உள்ளூர் தாதாக்களிடம் ஒப்படைப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தெரிந்தது இரண்டு வழிகள் ஒன்று மிரட்டி பணியவைப்பது,இல்லையேல் பற்ற வைப்பது, பெரும்பான்மையான தருணங்களில் இரண்டாவது யோசனையே கையாளப்படுகிறது.
இதற்கு முன்னர், வடசென்னை பகுதியில் இருந்த குடிசைகள் முறைப்படி டோக்கன் கொடுத்து காலி செய்யப்பட்டன. ஆனால் அங்கிருந்த மக்களுக்கு கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகள் வழங்கப்ப்பட்டன. பெயர் அளவில் தான் அவை குடியிருப்புகள். அடிப்படை வசதிகளுக்கு அப்பாற்ப்பட்ட ‘கடி‘யிருப்புகளாகவே அவை இருக்கின்றன. ஒரே ஒரு உதாரணம் போதும் அதன் நிலையை விளக்க, கண்ணகி நகரில் கர்ப்பினி ஒருவருக்கு வலி ஏற்பட்டால் அவர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு தான் வர வேண்டும் அதுவும் ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத தெருக்களை கடந்து நகரத்து டிராப்பிக்கில் நசுங்கி பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும்….
   இது போன்ற அனுபவங்களால் தற்போது இருக்கும் குடியிருப்புகளை காலி செய்து வேறு இடங்களுக்கு மாற மக்கள் மறுக்கின்றனர்.
சாமானிய மக்களிடம் இருந்து எடுக்கப்படும் இடங்களுக்கு பதிலாக உரிய முறையில் சம்பந்தபட்டவர்களின் வாழ்வாதாரம் பறிபோகாத வகையில் மாற்று இடங்களை வழங்க வேண்டும். ஆனால் அதை விடுத்து வாழும் குடிசைகளை தீக்கிரையாக்குவதை எப்படி நியாயப்படுத்த முடியும்.
உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் காலி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு அவர்களின் உழைப்புச் சூழலையும் உறுதி செய்ய வேண்டும். உதாரணமாக ஜாபர்கான்பேட்டையில் இருந்து தி.நகருக்கு பட்டன் காஜா வேலை செய்ய செல்லும் ஒருவரை அங்கிருந்து காலி செய்து பல்லாவரம் தாண்டி குடியமர்த்தினால் அவரின் தினசரி வருவாய் என்னவாகும் ?
தீ விபத்துகளில் சில மனித உயிர்கள் மறிக்கலாம், சில லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமடையலாம், ஆனால் அதையெல்லாம் தாண்டி போன நிமிடம் வரை வாழ்ந்து வந்த இடம் தரைமட்டமாகி இருக்கும் நிலையை காணும் போது மனதில் ஏற்படும் ரனம்…அனைத்திலும் கொடியது. அதன் வலியை என்னவென்று விவரிப்பது…
ஒரு பூகம்பம்,ஒரு சுனாமி வரலாற்றில் என்றென்றும் பேசப்படுகின்றன. காரணம் கன்னுக்கு முன் நிகழும் அழிவு, அதற்கு ஒப்பானதே குடிசைகளை தீக்கு கொடுத்து விட்டு நிராயுதபாணிகளாக நிற்கும் மக்களின் நிலை……
அனைத்திலும் inclusive என பேசும் அரசு இயந்திரம் வளர்ச்சியில் மட்டும் உழைப்பாளி மக்களை exclusive பட்டியலில் சேர்க்கிறது என்றே குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
-தியாகச் செம்மல்
செய்தியாளர்
புதிய தலைமுறை