நிலத்தடி நீர், குடிநீர் பற்றாக்குறை சென்னையை மிரட்டத் தொடங்கியுள்ளன


கைவிரித்த காவிரி, பொய்த்துப் போன மழை, ஆழம் சென்றுவிட்ட நிலத்தடி நீர் ஆகியவை சென்னையை மிரட்டத் தொடங்கியுள்ளன. தற்போதைய குடிநீர் கையிருப்பு மே மாதம் வரை போதுமானதாக இருக்கும் என்றாலும், வெயில் காலத்தில் நீர்தேவை அதிகரிக்கும் என்பதால் நீர் பற்றாக்குறையை ஒன்றிரண்டு மாதங்களிலேயே சென்னை வாசிகள் உணரத்தொடங்குவார்கள் என்கின்றனர் வல்லுனர்கள்.
தவிக்க காத்திருக்கும் சென்னை:
கடந்த 2012 ஆண்டு புள்ளி விவரத்தின்படி சென்னை மாநகரத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 87 லட்சம். இந்த 87 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு தேவையான குடிநீர் 830 மில்லியன் லிட்டர்.
சென்னையைப் பொறுத்தவரை மழை, ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர், வீராணம், நிலத்தடி நீர் ஆகிய ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் நீரை வைத்தே மக்களுக்கு குடீநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவை தவிர மீஞ்சுரில் உள்ள கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தில் இருந்து நமக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கிடைத்து வருகிறது.
நிலத்தடி நீர் தவிர பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் நீரை தேக்கி வைக்க நான்கு பெரிய நீர்த்தேக்கங்கள் சென்னையைச் சுற்றிலும் உள்ளன. பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், செம்பரம்பாக்கம் ஆகிய இந்த நான்கு நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 11.05 ஆயிரம் மில்லியன் கன அடி ஆகும்.
இந்த ஏரிகளில் தற்போதைய மொத்த நீர்இருப்பு 5.3ஆயிரம் மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த நீர் அதிகபட்சமாக மே மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், வெயில் காலம் தொடங்கிவிட்டால் நீர் தேவை அதிகரிக்கும் என்பதால் ஒன்றிரண்டு மாதங்களிலேயே பற்றாக்குறையை உணர முடியும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றர்.
ஆந்திராவின் கிருஷ்ணா நதியில் இருந்து ஆண்டுக்கு 15 மில்லியன் கன அடி பெறுவதற்கு ஒப்பந்தம் உள்ளது. இதில் நிலம் உறிஞ்சுவது போக 12 மில்லியன் கன அடி கிடைக்கும் என ஒப்பந்தம் உள்ளது. ஆனால், இதுவரை 8 டி.எம்.சிக்கும் அதிகமாக நீர் பெறப்பட்டதில்லை. அதற்கு காரணம் சென்னையில் தற்போது உள்ள 4 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு இதற்கு போதுமானதல்ல.
இவை தவிர வீராணம் ஏரியில் இருந்து நமக்கு மாதம் ஒன்றுக்கு 6 மில்லியன் கன அடி கிடைத்து வருகிறது. வீராணத்தின் முக்கிய குடிநீர் ஆதாரம் காவிரி ஆறுதான். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்துவிட்டதால் வீராணத்திற்கும் தண்ணீர்வரத்து தடைபடும் என்பதால் சென்னையில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு உருவாகும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
இதேபோன்ற ஒரு சூழல் கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்டபோது அப்போதைய அதிமுக ஆட்சியில் சென்னைக்கு லாரிகள் மூலமாகவும், ரயில் மூலமாகவும் குடிநீர் கொண்டு வரப்பட்டது. இதில் பெரும்பலான அளவு நீர் காவிரியில் இருந்தே கொண்டுவரப்பட்டது.
தற்போதைய நிலையில் அதுவும் சாத்தியமில்லை. நிலத்தடி நீர் மட்டம் ஏற்கனவே குறைந்து வரும் நிலையில்,காவிரியும் கைவிரிக்க, மழையும் பொய்த்துப்போக, கிருஷ்ணா நதி நீரை மட்டுமே நம்பி சென்னை மாநகரம் உள்ளது. எனவே இந்த ஆண்டு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்றே கூறலாம்.
நிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம் இல்லாவிட்டால் பெரும் அபாயம்
தமிழகத்தில் குறையும் நிலத்தடி நீர்:
நிலத்தடி நீரை பொறுத்தவரை வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன.
கன்னியாகுமரி, நீலகிரி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையின் பல பகுதிகள் போதிய அளவில் நிலத்தடி நீர்மட்டம் இருக்கிறது. சென்னை மாவட்டத்தில் அதிக அளவு நீர் உறிஞ்சப்படுவதால் , உப்பு நீர் அதிகரித்து அபாய நிலையில் இருக்கிறது.
சென்னைக்கு நீர் தரும் மாவட்டங்களில் ஒன்றான திருவள்ளூரும் இந்த பாதிப்புகளை பகிர்ந்துகொள்கிறது. வேலூரின் 14 பஞ்சாயத்துகள், சேலம் மற்றும் தஞ்சையின் 10 பஞ்சாயத்துகள், திருச்சியின் 9 பஞ்சாயத்துகள் மற்றும் விழுப்புரத்தின் 7 பஞ்சாயத்துகள் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன.
இந்த நேரத்தில் 2011 - 2012 ஆண்டுக்கான மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கை கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களை தெரிவித்திருக்கிறது. இதில் கடந்த ஒராண்டு காலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தின் சரிவு வேகமாக இருந்திருக்கிறது.
சென்னையில் கடந்த 2011ல் 15 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம், 2012ல் 17 அடியாக குறைந்திருக்கிறது. தருமபுரியில் 2 அடி நீர்மட்டம் குறைந்திருக்கிறது. விழுப்புரத்தில் 19 அடியாக இருந்த நீர்மட்டம் 24 அடியாக சரிந்திருக்கிறது. பெரம்பலூரில், 28 அடியில் இருந்து 34 அடியாகவும், நாமக்கல்லில் 35 அடியில் இருந்து 43 அடியாகவும் குறைந்திருக்கிறது.
ஈரோட்டில் 26 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 33 அடியாகவும், திருப்பூரில் 28 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 36 அடியாகவும் குறைந்திருக்கிறது. இந்த விவரங்கள் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஏற்பட்ட மாற்றங்களை தெரிவித்திருக்கிறது.
அபாயகரமான அளவை நோக்கி..
கிழக்கில் டெல்டா பகுதிகள், மேற்கில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள், தெற்கில் நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் என தமிழகத்தை 7 விவசாய காலநிலையாக பிரித்திருக்கிறார்கள் வேளாண் ஆராய்ச்சியாளர்கள்.
காவிரி நதி பாய்வதால், டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை பொறுத்தவரை அதிக அச்சம் இல்லை என்கிறார்கள். ஆனால், மற்ற பகுதிகளில் 500 முதல் ஆயிரம் அடி வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருக்கிறது. அதாவது 500 முதல் ஆயிரம் அடிக்கு கீழே போனால் மட்டுமே தண்ணீரை எடுக்க முடியும்.
மேற்கு மாவட்டங்களில் குறைந்தபட்சம் 700 அடியாகவும், தெற்கு மாவட்டங்களில் 600 அடியாகவும், வடக்கு மாவட்டங்களில் 700 முதல் 800 அடி வரையும் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 500 முதல் ஆயிரம் அடி வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருக்கிறது.
உணவு உற்பத்தியை பொறுத்தவரை, தமிழகம் நல்ல முன்னேற்றமான நிலையில் இருக்கிறது. 2011 -12ல், இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி 241 மில்லியன் மெட்ரிக் டன்னான இருந்தது. இதில், தமிழகத்தின் உணவுப்பொருள் உற்பத்தி மட்டுமே 105 மில்லியன் மெட்ரிக் டன். புதிய வகை பயிர்கள், தொழில்நுட்பம், வறட்சி தாங்கும் பயிர்கள் என இது சாத்தியமானதாக இருந்த போதிலும், தமிழகத்தின் வேளாண் பரப்பு 60 லட்சம் ஹெக்டேரில் இருந்து 50 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது என்பதும் வருங்காலத்தின் அபாய அறிகுறியாக தென்படுகிறது.
நடப்பாண்டில் ஒட்டுமொத்த தமிழகமே குடிநீர் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஏற்கனவே வறண்ட பூமியாக காட்சியளிக்கும் ராமநாதபுரம் கூடுதல் வறட்சியை சந்திக்க நேரிடும் என தெரிகிறது.
இந்த மாவட்ட மக்களை பொருத்தவரை, குடிநீர் என்பது எப்போதுமே கானல் நீர்தான். இந்த மாவட்ட மக்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, கடந்த திமுக ஆட்சியில் ராமநாதபுரம் கூடடு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனாலும், இது பெரிய அளவில் பயன் தரவில்லை. இந்த மாவட்டத்தை பொருத்தவரை, இப்போதே ஒரு குடம் தண்ணீரை ஐந்து ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீர் மட்டுமே மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
                                                     .-பசுமை நாயகன்