தனித்துவிடப்பட்ட இளம்பெண்…. உதவி செய்தது புதிய தலைமுறை


            சென்னை கோயம்பேட்டில் தனித்து விடப்பட்ட பதினேழு வயது பெண்ணை பத்திரமாக மீட்டது புதிய தலைமுறை. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை அந்த நிகழ்வை கவனமாக பின் தொடர்ந்தது புதிய தலைமுறை செய்திக்குழு.
நேற்று(13-01-2013) பகல் பத்து மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்றது புதிய தலைமுறை செய்திக்குழு. அங்கே ஒரு பெண் அழுவதை கண்ட செய்தியாளர் , அந்தப் பெண்ணிடம் விசாரிக்க முதலில் பதிலளிக்க மறுத்த அவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பேசியிருக்கிறார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய தம் காதலர் மயிலாடுதுறையில் இருந்து தம்மை அழைத்துக் வந்து இங்கு விட்டுவிட்டு போய்விட்டதாக கூறியிருக்கிறார். உடனடியாக செயல்பட்ட செய்திக்குழு அந்தப் பெண்ணின் சொந்த ஊரான கடலூர் மற்றும் அவர் வேலை பார்த்த மயிலாடுதுறையில் இருக்கும் நமது செய்தியாளர்களை தொடர்பு கொண்டது.
செய்தியாளர்கள் அளித்த தகவலின் பேரில் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் கோயம்பேடு காவல்நிலையத்துக்கும் சிறார் உதவி எண்ணான 1098 க்கும் தகவல் தெரிவித்தது புதிய தலைமுறை செய்திக்குழு .
காவல்நிலையத்தில் நடந்த முதற்கட்ட விசாரணைக்குப் பின் சிறார் பாதுகாப்பு இல்லத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டாள் அந்தப் பெண்.
இந்தநிலையில் நள்ளிரவு மீண்டும் கோயம்பேடு சென்ற புதிய தலைமுறை செய்திக்குழு சென்னை வந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு உதவியது.

இதனையடுத்து இன்று(14-01-2013) காலை பெண்ணை அவரது பெற்றோர் அழைத்து சென்றனர்.
புதிய தலைமுறையின் சமூக அக்கறையால் தைத்திருநாளில் வழி பிறந்த நம்பிக்கையுடன் ஒன்றிணைந்த குடும்பத்தாரின் கண்களில் ஒளி வீசியது.

                                            -பசுமை நாயகன்