கிருஷ்ணா நீரை கூடுதலாக விட கோரிக்கை


          கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக, ஆந்திர தலைமைச் செயலாளர்கள் இடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தமிழக தலைமைச்செயலக மையக்கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழக தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயலர் சாய்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.ஆந்திர தலைமைச் செயலர் மின்னி மேத்யூ தலைமையில் அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
தற்போது சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீரின் அளவு விநாடிக்கு 124 கன அடியாக உள்ளது. ஆந்திராவில் வரதபாளையம் அருகே கிருஷ்ணா கால்வாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக நீரின் அளவு குறைந்துள்ளதாகவும், 6 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் கால்வாயை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆந்திர அரசு கூறி வருகிறது.
கிருஷ்ணா கால்வாயில் வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 300 கன அடி முதல் 400 கன அடி வரை இருந்தால் மட்டுமே எதிர் வரும் கோடை காலத்தில் சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். எனவே, கால்வாய் சீரமைப்பை துரிதப்படுத்தவும், கூடுதல் தண்ணீர் விடவும் பேச்சுவார்த்தையின் போது தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
                                             -ஹாட் ஸ்பாட் நரேஷ்