கடந்த 29நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும்காந்தியவாதி சசிபெருமாள்.



    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, கடந்த 29 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதியான சசி பெருமாளை சில கட்சித் தலைவர்கள் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் சசிபெருமாள்.
இதையடுத்து, அவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.24 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால், அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது.கடந்த 22-ஆம் தேதி அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு, சசிபெருமாளுக்கு ஜாமின் பெற்றுத் தரப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வந்த சசிபெருமாள் சனிக்கிழமை மீண்டும் மெரினா கடற்கரையில் காந்தி சிலையின் கீழ் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அதனால், அவரை போலீசார் மீண்டும் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இதற்கிடையில் சசிகுமாருக்கு பாமக தலைவர் ராமதாஸ், பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன், நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் சசி பெருமாளை சந்தித்தனர்.
உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று, அப்போது அவர்கள் வலியுறுத்தினர். எனினும், உண்ணாவிரதத்தை கைவிட சசி பெருமாள் மறுத்துவிட்டார். மவுன விரதம் இருந்து வரும் அவர், தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக எழுத்து மூலமாக தெரிவித்தார்.
இலக்கு வைத்து பெருக்குகிறது அரசு: பா.ஜ குற்றச்சாட்டு
உண்ணாவிரதம் இருந்து வரும் சசிபெருமாளை சந்தித்த தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன்: மது விற்பனையை திமுக ஆரம்பித்து வைத்தது, அதனை அதிமுக பெருக்கி வருகிறது. மது விற்பனையால் வரும் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறது. அப்படி இருக்கும் போது மதுவால் விளையும் கேடுகளை அரசு எப்படி கண்டு கொள்ளும் என்றார்.