வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்குதூக்கு



   வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக அளிக்கப்பட்ட கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.
   இத்தகவலை உறுதிசெய்த கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.பி, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்னும் 14 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். மேலும் 14 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற, தூக்கிற்கான தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
  மீசை மாதையன், ஞானபிரகாஷ், பிலவேந்திரன், சைமன் ஆகிய வீரப்பனின் கூட்டாளிகள் நான்கு பேர் சார்பில் அளிக்கப்பட்டிருந்த கருணை மனுக்களை, குடியரசுத் தலைவர் கடந்த 11-ம் தேதி நிராகரித்தார். தற்போது கர்நாடகாவின் பெல்காம் சிறையில் உள்ள இந்த நான்கு பேருக்கும், கருணை மனுக்கள் ரத்து செய்யப்பட்டதற்கான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது உறவினர்களுக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
  கர்நாடகாவில் காவல்நிலையம் ஒன்று தாக்கப்பட்டதில் நான்கு பேர் பலியாகினர். இதேபோல், பாலாறு வெடிகுண்டு சம்பவத்தில் 22 போலீசார் உயிரிழந்தனர். இந்த வழக்குகளில், வீரப்பனின் கூட்டாளிகளுக்கு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்குச் சென்ற போது, தண்டனையை உச்சநீதிமன்றம் மரணதண்டனையாக மாற்றியது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த கருணை மனுக்களை தற்போது குடியரசு தலைவர் நிராகரித்துள்ளார்.
  1991-ஆம் ஆண்டு கர்நாடக பகுதியிலுள்ள காவல்நிலையத்தை வீரப்பன் கூட்டாளிகள் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். 1993-ஆம் ஆண்டு பாலாறு பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறையினர் 22 பேர் கொல்லப்பட்டனர்.
  இந்த இரு வழக்குகளில் தொடர்புடையதாக 100-க்கும் அதிகமானோரை கர்நாடக காவல்துறை கைது செய்தது. இதில் பிலவேந்திரன், ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கும் மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
  இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது குறைவானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
  மேலும் பிலவேந்திரன், ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 4 பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்
                                                                   -ஹாட் ஸ்பாட் நரேஷ்