பத்திரமா போயிட்டு வாங்க…அன்புடன்- பார்வதிபாமாமனம் ஒரு குரங்கு…

    ஒரு இடம் விட்டு ஒரு இடம் தாவிக்கொண்டே போகும் குரங்கு..
இந்த குரங்கை கட்டுப்படுத்துவது பெரும்பாலானவர்களுக்கு வசமாகாத வித்தையாகவே இருக்கிறது..
  தன் மனதை தானே கட்டுப்படுத்தி தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் ஆட்டுவிப்பது ஒருசிலரே...
  ஆனால் மனதை கட்டுப்படுத்தாமல் அதன் போக்கில் அலைய விடுபவர்கள்தான் வாழ்க்கையின் அதீத சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்..
  மனதின் அலைப்பாயலுக்கு புறக்காரணிகள் பல இருந்தாலும் அதனை கட்டுக்குள் வைக்கும் அகக்காரணியான நாம் தானே…
  அதிலும் குறிப்பாக பயணங்களின்போது வேகத்தை விரும்பி பறக்கும் இளைஞர்கள் அதன் விளைவை அறியாமல் அதிர வைக்கிறார்கள்..
  இளம் ரத்தம் பயமறியாதுதான்.. ஆனால் அதிகபட்ச வேகம் ஆபத்தானது இல்லையா..?
  எங்கு பார்த்தாலும் போட்டிகள்… ஓட்டங்கள் …. ஒன்றைப்பிடிக்க ஒன்று… ஒன்றை தொடர்ந்து ஒன்று என்று ஓடும் ஓட்டத்தில் எதற்கு கவனம் செலுத்த வேண்டும், எதை அலட்சியப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை காட்ட மறந்து விடுகிறோம்..
  அக்கறை காட்ட வேண்டிய விஷயத்தில் அலட்சியம் காட்டுவதால் ஏற்படும் விபரீதங்கள் கொஞ்சநஞ்சமல்ல… வாகனத்தை வேகமாக ஓட்ட வேண்டாம்… வேக எல்லை 40 கிலோமீட்டர்… ஹெல்மெட் பயன்படுத்துவது கட்டாயம் என்பதெல்லாம் அக்கறையான…. கவனிக்க வேண்டிய விஷயங்கள்தானே… இதில் அலட்சியப்படுத்த என்ன இருக்கிறது?
ஆனால் அலட்சியப்படுத்துவதின் அல்லது அக்கறையில்லாததன் விளைவு…? அண்மையில் சக ஊழியர் ஒருவர் விபத்தை எதிர்கொண்டார். ஹெல்மெட் போடவில்லை…. அதிவேகத்தில் வந்தார் என்றெல்லாம் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. ஆபத்தான கட்டத்தில் இருந்து அவர் மீண்டுவிட்டார் என்பது இப்போது நல்ல செய்தியாக இருக்கிறது.. ஆனால் அவர் விபத்துக்குள்ளான அந்த சில நொடிகளுக்கு முன்பு ….வேகமாக செல்வது அவருக்கு கட்டாய சூழலாக இருந்திருக்கலாம்..
ஏதேனும் நெருக்கடிகள் இருந்திருக்கலாம்.. அல்லது வேகத்தை அவர் விரும்பியிருக்கவும் கூடும்… அதையெல்லாம்விட அவர் ஹெல்மெட் போடவில்லை என்பதற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும்..?
இத்தனைக்கும் எதிரே வந்த ஒரு இருசக்கர வாகனத்துடன்தான் மோதியிருக்கிறார்.. ஹெல்மெட் போட்டிருந்தால் அவர் சிறிய காயங்களுடன் தப்பிஇருக்கக்கூடும் என்று சொல்கிறார்கள். இப்போது அதிக காயங்கள்… அவதி… வேதனை…
இரு சின்னக்குழந்தைகளுடன் அவரது மனைவி தவிக்கும் தவிப்பு.. குடும்பத்தினர் படும் துயரம்.. இத்தனையும் ஏன்? கொஞ்சம் நம் மேலும் நாம் அக்கறை செலுத்திக்கொள்ளலாமே…
நாம் நம் மீது காட்டு ம் அக்கறை, நம் குடும்பத்தினரின் பாதுகாப்பான அமைதியான சூழலுக்கு நாம் கொடுக்கும் கூடுதல் மரியாதையாக வைத்துக்கொள்ளலாமே…
இது நான் கேள்விப்படும் அல்லது சக பணியாளர்கள் சந்திக்கும் முதல் விபத்து அல்ல.. சில ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்பப்பிரிவு ஊழியர் ஒருவர் மிகக்கொடூரமான விபத்தில் சிக்கி தனது உயிரையே இழந்துவிட்டார்.
30-32 வயதில் அவர் அந்த நிலையை எட்டியது அந்த சமயத்தில் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது…
மிகத் திறமையான, மிகவும் இனிமையான அப்படி ஒரு நபரை இழந்தது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, சக ஊழியர்கள் அனைவரின் மனதையும் அசைத்துவிட்டது..
அறிந்தோர், தெரிந்தோர் அளவில் நாம் கேட்க நேரிடும், அல்லது சந்திக்க நேரிடும் விபத்துக்கள் மட்டுமே நம்மை அதிகம் பாதிக்கின்றன.. ஒருவர் பலி.. இருவர் பலி.. சிலர் காயம் என்று அடிக்கடி ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் படிப்பதோடு அவை முடிந்துவிடுகின்றன.
நம் நினைவை விட்டு அகன்று விடுகின்றன. தினசரி அங்கொன்றும் இங்கொன்றுமாக எவ்வளவோ விபத்துக்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிரை பறிகொடுக்கிறார்கள்.. தப்பியவர்கள் காயங்களுடன் வேதனைப்படுகிறார்கள்..
அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முக்கிய இடம் இருக்கிறது..
பெரும்பாலான சாலைவிபத்துக்களுக்கு காரணம் அலட்சியம் அல்லது அதீத வேகமே முக்கிய காரணமாக இருக்கிறது.. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்…
யாரோ எதைப்பற்றியோ சொல்கிறார்கள் என்றில்லாமல் ஒவ்வொருவரும் தத்தமது பாதுகாப்பில் அக்கறை காட்டினால், விபத்துக்களின் சதவீதம் நிச்சயமாகக் குறையும்.. நம் மீது நாமே அக்கறை காட்டாவிட்டால் வேறு யார் காட்ட முடியும்.. ?
வேகத்தடைகளை மதிக்கலாம்..சாலை விதிகளை முறையாக பின்பற்றலாம்.. வாகனங்களில் செல்லும்போது கவனத்தை திசைத்திருப்பும் செல்போன் பேச்சு வேண்டாம்..
பாட்டு கேட்டபடி பயணம் வேண்டாம்.. நாம் சரியாக வாகனம் ஓட்டினாலும் எதிரே, அருகே வருபவர்களின் போக்கையும் கணித்து வாகனம் ஓட்டுவதும் முக்கியம் தானே.. எல்லாம் இப்போது புதிதாக பேசும் விஷயங்கள் அல்ல. காலம் காலமாக சொல்லப்படும் சின்னசின்ன விஷயங்கள்தான்.. சின்ன விஷயங்களில் செலுத்தப்படாத அக்கறை, பெரிய துயரங்களுக்கு காரணமாகி விடுகின்றன.
விபத்துக்களே எதிர்பாராமல் ஏற்படுபவைதான் என்றாலும் அந்த சமயத்திலும் நமது பாதுகாப்பை நாம் உறுதி செய்துகொள்வோம்.. அதுதான் நமக்கும், நம்மை நேசிப்பவர்களுக்கும் நாம் காட்டும் அன்பு…
வேகம் சுறுசுறுப்பின் அடையாளம்..
எதில் அந்த வேகத்தை காட்டுகிறோம்.. விவேகத்தை காட்டுகிறோம் என்பதுதான் முக்கியம்..
வீட்டிலிருந்து கிளம்பும்போது மனைவியோ, தாயோ, பிள்ளைகளோ யாராவது ஒருவர் கண்டிப்பாக சொல்வார்கள் பத்திரமாக போய்விட்டு வாங்க… என்று… அவர்களின் அக்கறையை அன்பை மதிக்க, நாம் பத்திரமாக பயணிப்போம்..