கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே, சென்னையில் வெயிலின் தாக்கம்



கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே, சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால், அதனைச் சார்ந்த தொழில்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
  சித்திரை வெயிலின் தீவிரம் இன்னும் தொடங்கவில்லை...ஆனால் கடந்த ஆண்டை விட சற்று முன்னதாகவே வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டதை காட்டுகின்றன இந்த காட்சிகள்..... வாட்டியெடுக்கும் இந்த வெயிலில் இருந்து காத்துக்கொள்ள ஏராளமானோர் நீர்ச்சத்து அதிகமுள்ள தர்பூசணிக் கடைகளில் அதிகமாக கூடிவருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஏராளமாக முளைத்துள்ள இந்தக் கடைகளில் தர்பூசணி ஒரு துண்டு பத்து ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும் தர்பூசணியில் அதிக கனிமங்கள் இருப்பதையும் முதன்மைக் காரணமாக கூறுகின்றனர் வாகன ஓட்டிகள்.
வெயில் காலத்தில் நாம் இழக்கும் உப்பு மற்றும் நீர்ச்சத்தினை ஈடு செய்ய எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள்.

  தர்பூசணி, இளநீர் விற்பனை சூடு பிடித்திருந்தாலும், நமது பாரம்பரிய உணவுகளான கேப்பைக் கூழ் மற்றும் கம்மங்கூழ் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பத்து ரூபாய்க்கு ஒரு செம்பு என கிடைக்கும் கூழை ருசிக்கும் வாடிக்கையாளர்களுக்காக ஊறுகாய், துவையல், வெங்காயம், மிளகாய் ஆகியவற்றையும் விற்பனையாளர்கள் வைத்துள்ளனர்.
  இதனால் நாளொன்றுக்கு இந்த கூழ் வகைகள் 500 ரூபாய் வரை விற்பனையாகிவருகின்றன. அதேபோல், எலுமிச்சை, இஞ்சி ஆகியவற்றின் சாறோடு கலந்து கிடைக்கும் கரும்புச் சாறின் விற்பனையும் தற்போது சக்கைபோடு போட்டு வருகிறது.
                                           -ஹாட் ஸ்பாட் நரேஷ்