இலங்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது      இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் வலுத்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரம்பற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
   ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும், ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளை எட்டியுள்ளது.
   இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள், செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளாக தொடர்கிறது. கோவை சட்டக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் 3-வது நாளை எட்டியுள்ளது. இதுபோல், புதுச்சேரி கட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டமும் 3-வது நாளாக தொடர்கிறது. இப்போராட்டத்திற்கு மற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
   இதேபோன்று கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
   நெல்லை சேவியர் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் 13 பேர், நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
   மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரம் அடைந்து வரும் நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரம்பற்ற விடுமுறையை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் 2-வது நாளாக நேற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த நிலையில், பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தங்கள் போராட்டத்தை பல்கலைக்கழகம் நசுக்க பார்ப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக இந்தியா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்போராட்டத்தில் இறங்கியுள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது.