இன்றைய எந்திர யுகத்தில் மூலிகைகளின் பயன்பாடு என்பது அன்றாட வாழ்க்கை முறையில் இருந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டது என்றே கூறலாம். சாதாரண காய்ச்சல் என்றாலே அடுத்த நிமிடம் நாம் விரைந்து செல்லும் இடம் மருத்துவமனைகளாகத்தான் இருக்கின்றன. ஆனால், நம் முன்னோர்கள் கண்டறிந்த மூலிகைகள் எல்லா காலங்களிலும் பலன் தந்துகொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட மூலிகைச் செடிகளை வளர்க்க சென்னை மாநகராட்சி முயற்சிகளை எடுத்துள்ளது.
     கான்கிரீட் கட்டடங்கள் நிறைந்துள்ள சென்னை போன்ற மாநகரங்களில் , பசுமையான இடங்களைப் பார்ப்பதே அரிதாகத்தான் இருக்கிறது. இந்த சூழலில், கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கும் சிறுவர் விளையாட்டுப் பூங்கா ஒன்று சென்னையில் இருக்கிறது. இது வெறும் பூங்கா மட்டும் இல்லை. முகலிவாக்கத்தில் உள்ள ஏ.ஜி.எஸ்.,காலனியில் அமைந்துள்ள மூலிகைத் தோட்டம். நமது பாரம்பரிய மூலிகைகளின் பயன்களை நகர வாழ்க்கையின் வேகத்தில் மறந்து விட்டு வாழும் மக்களுக்கு அவற்றை மீண்டும் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாக சென்னை மாநாகராட்சி உருவாக்கி உள்ள பசுமை மூலிகை தோட்டம்தான் இது.
     
சாதாரண காய்ச்சல், அஜீரணம் தொடங்கி, பாம்பு கடி, சிறுநீர் கல் பிரச்சணை வரை பெரும்பாலான உடல்நலக் கோளாறுகளுக்குத் தீர்வு தரக் கூடிய மூலிகைகள் இந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தூதுவளை, சோற்றுகற்றாழை, சீமைபொன்னாங்கன்னி போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய, ஆனால் நவீன யுகத்தில் நம்மால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் மூலிகைகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன. மாறி வரும் காலச் சூழலில், மகத்துவம் நிறைந்த நமது உணவு முறையை மறந்துள்ள மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பூங்கா அமைந்திருக்கிறது.
    கடந்த நிதியாண்டில் மாநகர மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பூங்கா இன்று ஒரு அழகான மூலிகைத் தோட்டமாக உருவெடுத்துள்ளது. இதேபோல் 2013-2014 நிதியாண்டில் சென்னையில் மேலும் 11 பூங்காக்கள் மூலிகைத் தோட்டங்களாக உருமாறும் என்கிறது சென்னை மாநகராட்சி.