கம்பீரமாக வீற்றிருந்த பல மரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை?





  சிறுவயதில் நாம் அனைவரும் நமது வரலாற்றுப் புத்தகத்தில் மாமன்னர்கள் பற்றி படிக்கும் போது எல்லாம் " அரசர் சாலையோரம் முழுவதும் மரம் நட்டார், மக்களுக்காக குளம் வெட்டினார்" என படித்திருப்போம்.
ஆனால் இன்றோ சாலைகள் அமைக்க மரங்கள் வெட்டப்படுகின்றன. கம்பீரமாக வீற்றிருந்த பல மரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை?!
தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், கொளுத்தும் வெயில் தாக்கத்தில் ஓய்வெடுக்க சாலை ஓர மரங்களில் தஞ்சம் அடையும் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் தந்த இந்த மரங்கள் இன்று வீதியில் வெட்டப்பட்டுக் கிடக்கின்றன. சாலை வசதிகளை மேம்படுத்த, நெடுஞ்சாலைத் துறையினர், விரிவாக்கப் பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால், மக்கள் பயன்பெறுவது ஒருபுறம் இருந்தாலும், சாலை ஓரங்களில் கிளைப் பரப்பி நிழல் தந்த மரங்கள் வெட்டப்படுவது வேதனை தரும் நடவடிக்கை.
பழங்காலத்தில் நடப்பட்ட மரங்கள்,கிராமப்புறத்தை பசுமையாகவும் சுகாதாரமாகவும் வைக்க உதவின. ஆனால், தற்போது வெட்டப்படும் மரங்களால் தங்கள் பகுதி சுற்றுச்சூழல் சீர்கெடும் என்பது பொதுமக்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.
மரங்கள் எங்கு வெட்டப்பட்டாலும் அதற்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நடுவது மரபாக உள்ளது. ஆனால், அவ்வாறு நடப்பட்டாலும், அவை மரமாகும் வரை முறையாக பராமரிக்கப்படுமா என்பது இப்பகுதி மக்கள் எழுப்பும் கேள்வி.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம் கேட்டதற்கு, மரக்கன்றுகள் நடுவதற்கென்றே சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மரங்கள் மனிதனுக்கு மட்டுமின்றி, பூமியில் வாழும் பல்வேறு உயிரினங்களின் நலனுக்கும் இன்றியமையானதாக இருப்பவை. அத்தகைய மரங்களை அழிக்காமல், புதிய திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை.