னியார் அரசு கூட்டு நிறுவனங்கள், உள்ளாட்சித் துறை அமைப்புகள் ஆகியவற்றின் வரவு செலவுக் கணக்குகளையும் தலைமை கணக்கு தணிக்கை ஆணையத்தின் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என அந்த அமைப்பின் ஆணையரான வினோத் ராய் வலியுறுத்தி உள்ளார்.
தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் பொறுப்பில் இருந்து நாளை அவர் ஓய்வு பெறுவதை அடுத்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசிடம் இருந்து நிதி பெறும் அமைப்புகள் அனைத்தும் தலைமை கணக்குத் தணிக்கை ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு உள்பட தலைமை கணக்கு தணிக்கை ஆணையம் வெளிக்கொணர்ந்த அனைத்துமே உண்மையானவை என்று வினோத் ராய் தெரிவித்தார். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக தலைமை கணக்குத் தணிக்கை ஆணையராக இருந்த வினோத் ராய், தான் எப்போதுமே அரசியல் சார்பற்ற முறையில் செயல்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஓய்வை அடுத்து என்ன செய்வது என்பது குறித்து இன்னும் திட்டமிடவில்லை என்றும் அவர் கூறினார்.
பிறப்பும், கல்வியும்
வினோத் ராய். உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூரில் 1948ம் ஆண்டு பிறந்த இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதார முதுகலைப் பட்டமும், பொது நிர்வாகத்தில் ஹார்வேட் பல்கலைக்கழக பட்டமும் பெற்றவர்.
வினோத் ராய் பின்னணி விவரங்கள்
சிஏஜி எனப்படும், நாட்டின் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய், 22ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். கடந்த சில ஆண்டுகளில், உலகின் கவனத்தைக் கவரும் அளவுக்கு தனது தணிக்கை அறிக்கைகள் மூலம் சர்ச்சைகளை ஏற்படுத்திய வினோத் ராய் குறித்த பின்னணி விவரங்கள்.
இந்தியாவில் தலைமை தணிக்கை அலுவலகம் 1860ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், இன்று வரை அதன் தலைமை பொறுப்பு வகித்தவர்களில், கடும் சர்ச்சைகளைக் கிளப்பிய முதல் தணிக்கை அதிகாரி வினோத் ராய்தான். 153 ஆண்டுகால பாரம்பரியம் இருந்தாலும், அதிகம் பேசப்படாமல், பலரால் கவனிக்கப்படாமல் தொடர்ந்த சிஏஜி பதவியை, உலகமே திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர். இதுவரை 30 தலைமை தணிக்கை அதிகாரிகள் பதவி வகித்திருந்தாலும், அதிக புயலைக் கிளப்பிய பெருமை வினோத் ராயையேச் சேரும்.
வினோத் ராய் அறிக்கையும் சார்சைகளும்....
தேர்தல் ஆணையத்தில் T.N. சேஷனைப் போல, தணிக்கை அலுவலகத்தை அதிகாரமிக்கதாக தலைநிமிரச் செய்திருப்பவர் வினோத் ராய். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி உரிம ஒதுக்கீடு என பலவற்றை குறித்தும் அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்ந்து, இவர் அளித்த அறிக்கைகளால் இன்று வரை அனல் பறக்கிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நஷ்டம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற இவரது அறிக்கையால், கிராமப்புற பாமரனும் அந்த தொகைக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று விவாதிக்கும் நிலை உருவானது. அது ஓய்வதற்குள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் இழப்பு 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் என அடுத்த அதிரடி அறிக்கை வெளியிட்டவர்.
சிஏஜி பதவி: அடுத்து யார்?

வரும் 22ம் தேதியுடன் விடைபெறும் 64 வயது வினோத் ராயின், அடுத்தடுத்த அதிரடி அறிக்கைகளால் அதிர்ந்த அரசு, சிஏஜி அலுவலகத்தை 3 பேர் கொண்ட அமைப்பாக மாற்றும் முடிவுக்கே வந்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இத்தனை புயலைக் கிளப்பிய பின் வினோத் ராய் ஓய்வு பெறுவதையொட்டி, அடுத்த சிஏஜி ஆக வர வாய்ப்புள்ளவர் எனச் சொல்லப்படும் சிந்துஸ்ரீ குல்லாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், நாட்டின் முதல் பெண் சிஏஜி என்ற பெருமையைப் பெறுவார்.