சென்னை அருகே எரிமலை?தீவிர ஆய்வில் 3 நிறுவனங்கள்
       எரிமலைகள் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று என்ற தகவலுக்கு மாறாக சென்னை அருகே ஒரு எரிமலை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    இதை உறுதி செய்வதற்காக 3 நிறுவனங்கள் எரிமலை குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
    சென்னையிலிருந்து சுமார் 100 முதல் 110 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 1757 ஆம் ஆண்டில் எரிமலை ஒன்று வெடித்து லாவாவை கக்கியதாகவும், மேலும், அந்தப் பகுதி முழுவதும் கடல் நீரின் நிறம் மாறியதாகவும், ஒரு மாலுமி தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
    அதே போல் ஒரு சில விஞ்ஞானிகளும் தங்களது வலைப் பக்கத்தில் இதை குறிப்பிட்டதுள்ளதோடு.வங்கக்கடலின் ஆழ் தரைப் பகுதியில் இருப்பதாக கூறப்படும் அதற்கு இன்னும் பெயர் வைக்காததால்,"0305=01" என்ற எண்ணை அதன் குறியீடாக குறிப்பிட்டுள்ளனர்.
   இது குறித்த தகவல் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை எந்த விளக்கத்தையும் வெளியிடாமல் இருந்தது.
    இதனிடையே பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பினர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த எரிமலை குறித்த தகவலை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டுள்ளனர்.
     எரிமலை இல்லை என்று மறுப்பு தெரிவிக்காத அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், எரிமலை இருப்பது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது, இருப்பினும் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், தேசிய கடலியல் ஆய்வு நிறுவனம், மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஆகியவை வங்கக் கடலில் எரிமலை இருக்கிறதா? என்பதை அறியும் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
    இது குறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறுகையில்: "நாங்களும் இந்த தகவலை பார்த்தோம்.. எரிமலை இருப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது மேலும் ஆய்வுகள் நடந்து வருவதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது" என்றார்.
    ஏற்கனவே அந்தமானில் ஒரு காலத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த எரிமலை தற்போது வீரியம் இழந்து காணப்படுகிறது. அதேபோல் ஆழ்கடலில் எரிமலை இருப்பதாக மேலை நாடுகளால் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
   இந்நிலையில், கல்பாக்கம் அணு மின்நிலையம் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் இருக்கக்கூடிய அந்தப் பகுதியில் எரிமலை உள்ளதா என்பது குறித்தும்,அவ்வாறு இருப்பின் அது தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறியும் முயற்சியில் இந்திய அரசு இறங்க வேண்டும் என்றும், மேலும், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியின் தாக்குதலுக்குப் பின் கடலில் ஏராளமான மாற்றங்கள் தினம் தினம் நிகழ்ந்து வருவதாக தேசிய கடல்வள ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
    மேலும், மீன்பிடிக்கச் செல்லும், மீனவர்கள் புதுச்சேரிக்கு கிழக்கே சில நேரங்களில் கடல் நீரின் நிறம் மாறியிருப்பதாகவும் கூறி வருகின்றனர் எனவே எரிமலையால் கடலோர மாவட்டங்களுக்கு பாதிப்புகள் வருவதற்கு முன்பு அதிலிருந்து காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.