உயிரை பையில் பிடித்து வாழ்ந்த மனிதர்


     உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருவதாகச் சிலர் சொல்லக் கேள்விப் பட்டிருப்போம். பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் தனது உயிரைப் பையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்.
அவர் பெயர் மேத்யூ கிரீன்.
  உனக்கு இதயமே இல்லையா என யாராவது சில நாட்களுக்கு முன் கேட்டிருந்தால் இல்லை என்று தான் சொல்லியிருப்பார் அவர்.பிரிட்டனைச் சேர்ந்த அவரிடம் இருதயமே இல்லை என்பது உண்மைதான் இரு ஆண்டுகளுக்கு முன் கார்டியோ மயோபதி எனும் நோயால் பாதிக்கப்பட்டதால் மேத்யூ கிரீனின் இருதயம் முற்றிலும் பழுதடைந்தது. செயல் இழந்த இருதயத்தை அகற்றுவதற்கு மருத்துவர்கள் முன்வந்தனர்.
ஆனால் மாற்று இருதயம் கிடைக்கவில்லை.
    இதனால், பிளாஸ்டிக் மற்றும் டைடானியத்தால் ஆன செயற்கையாக இரத்தத்தை பம்ப் செய்யும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டது.கிரினின் முதுகுப் புறத்தில் நீண்ட குழாய் செருகப்பட்டு அதனுடன் செயற்கை இருதயம் பொருத்தப்பட்டது.அந்த இருதயத்தை ஒரு பையில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். அவ்வப்போது இதன் பேட்டரியை சார்ஜ் செய்துக் கொள்ள வேண்டும். இப்படி, இரண்டு ஆண்டு காலம் எங்கு சென்றாலும் தனது செயற்கை இருதயத்தையும் கூடவே கொண்டு சென்றார் கிரீன்.

    இரண்டு வருடங்களுக்கு மேல் இதனைப் பயன்படுத்தினால் இரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.இந்நிலையில் கடந்த மாதம் கிரீனுக்கு ஏற்ற மாற்று இருதயம் கிடைத்துவிடவே அவருக்கு அதே மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது.
     தற்போது அவர் நலமுடன் இருக்கிறார், இரண்டாண்டு காலம் தனது உயிரைப் பத்திரமாகப் பிடித்து வைத்திருந்த அந்த செயற்கை இருதயத்தை நினைத்தபடியே.