வெட்டப்பட்ட மரங்கள்... வெயிலில் சென்னை...!

   வெளிநகரத்தில் வசிப்பவர்களுக்கு சென்னை, என்றால், கட்டிடங்கள் உள்ள காங்கிரீட் காடு என்று நினைப்பார்கள். ஆனால், உண்மையிலேலே பசுமை நிறைந்த மரங்களுடன்தான் சென்னை உள்ளது. அதன் அழகை ரசிக்க நீங்கள் விமானத்தில் பறந்து பார்த்தால்தான் தெரியும். இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் மற்றும் நெடுஞ்சாலைப் பணிகளுக்காக 31 சதவீத மர
ங்கள் வெட்டி தள்ளியிருக்கிறார்கள்.

இதுதவிர தனியார் கட்டடப் பணிகளுக்காகவும் ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதால் சென்னையில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரித்து வருகிறது . குறிப்பாக இந்தாண்டு வெயில் காலம் முடிந்தும் சென்னை நகரம் வழக்கத்தைவிட கடுமையான வெப்பத்தை சந்தித்து வருகிறது. குளிர் காலத்தில் கூடுதலாக குளிரும் என்பது, இப்போதே தெரிகிறது.

‘‘மெட்ரோ ரயில் பணிக்காக வெட்டப்பட்ட மரங்களை ஈடுகட்ட ஒரு மரம் வெட்டப்பட்ட இடத்தில் 5 மரங்கள் வீதம் நடப்பட்டு வருகிறது. இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் 2011-2012ஆம் ஆண்டு முடிய 15,827 மரக்கன்றுகளை பள்ளி, கல்லூரி சாலையோரங்களில் நட்டுள்ளது. மேலும், 2013ஆம் ஆண்டு இறுதிக்குள் 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் பொறுப்பாக தெரிவித்துள்ளது.

இருபது வருட மரத்தை வெட்டிவிட்டு, இரண்டு மாத கன்றை கொடுத்தால், எப்படி ஈடாகும். மரக்கன்று நடவு செய்வதோடு, மெட்ரோ ரயில் நிர்வாகம் கழன்று கொள்ள கூடாது. முறையாகப் பராமரித்து மரமாக வளர்ந்த பின்பு அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்.
                                                                                             -பசுமைநாயகன்