பேஸ்புக் விவகாரம் : மகாராஷ்டிர அரசிடம் விளக்கம் கேட்டது உச்சநீதிமன்றம்

               பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக மும்பையைச் சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
பேஸ்புக் கருத்து சர்ச்சை தொடர்பான வழக்கு இன்று உச்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் வாதிட்ட தலைமை வழக்கறிஞர் வாகன்வதி, தகவல்தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஆவது 'ஏ' பிரிவு தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க புதிய நெறிமுறைகளை அரசு வகுத்து வருவதாக கூறினார்.
ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா சிங்கால் என்ற மாணவி  தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தள ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வாஹன்வதிக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனை ஏற்று இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது வாஹன்வதிப, இணையதள சர்ச்சையை களைய புதிய நெறிமுறைகள் வகுக்கப்படும் என உறுதியளித்தார்.
சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைவைத் தொடர்ந்து மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் அச்சத்தினால்தான் இந்த கடையடைப்பு என்றும் மரியாதைக்காக அல்ல என்றும் சஹீன் தாதா என்ற பெண் கருத்து தெரிவித்திருந்தார். இதனை அவரது தோழி ரேணு ஸ்ரீனிவாசன் லைக் (like) செய்திருந்தார். இதற்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
-பசுமை நாயகன் &
-பூமித்ரா சுரேஷ்