இதில் 99சதவீத பெண்களுக்கு தீங்கு விளைவித்தவர்கள் நன்கு தெரிந்தவர்களே


  பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான் ஈடுபடுகிறார்கள் என்பது காவல்துறையினரின் தகவல்கள் மூலம் உறுதியாகிறது. தமிழகத்தில் 2011 ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக 677 வழக்குகள் பதிவாகின.
  இதில் 99 சதவீத வழக்குகளில் பெண்களுக்கு தீங்கு விளைவித்தவர்கள் அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களே என்கிறது அந்த கணக்கீடு. இதில் 50 சதவீத குற்றவாளிகள் பக்கத்துவீட்டில் வசிப்பவர்களாக இருக்கிறார்கள். 30 சதவீத குற்றவாளிகள் உறவினர்களாக இருக்கிறார்கள் என்கிறது அந்த கணக்கீடு.
  நன்கு அறிமுகமானவர்களால், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களால் குற்றம் இழைக்கப்படுவது நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என்கிறது அந்த கணக்கீடு.
   டெல்லி குழு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு வீதியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற வலுவான விவாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த கணக்கீடு வீதியை விட வீடு தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இடமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
  பல சம்பவங்களில், வீடுகளுக்குள் நடக்கும் இந்த வன்கொடுமைகள் வெளியே தெரிவிக்கப்படாமல், குடும்ப பிரச்சனையாக முடக்கப்படுகிறது என்கிறார்கள் சமூக நோக்கர்கள். இது குற்றவாளிகளுக்கு சாதகமாக போகிறது.
  குற்றவாளி நன்கு தெரிந்தவராக இருப்பதால் புகார்களை வாபஸ் பெறுவது அதிக எண்ணிக்கையில் நடக்கிறது என்கிறார் ஒரு காவல்துறை அதிகாரி. இதிலிருந்து மேலும் ஒரு தகவல் உறுதியாகிறது. அதாவது பாதிக்கப்பட்டவர்களில் தைரியமாக முன்வந்து புகார் அளிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
  இதற்கு காவல்துறையை குற்றம்சாட்டுகிறார்கள் பெண்கள் அமைப்பினர். "பெண்களுக்காக இயங்கும் மகளீர் காவல்நிலையங்களில் கூட பாதிக்கப்பட்ட பெண்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள்" என்கிறார் ஒரு பெண்ணுரிமை போரளி.
  பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை நடத்தும் முறையை முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்கிறார்கள் பெண் உரிமை ஆர்வலர்கள். பெண்களுக்கு ஆபத்தும், எதிரிகளும் தொலைவில் இல்லை.

                                                     -ஹாட் ஸ்பாட் நரேஷ்