ஓய்வு பெற்றவர் நீதிபதி கே.சந்துரு.


        சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்து கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றவர் நீதிபதி  கே.சந்துரு.  இவர் வழக்கறிஞராக இருக்கும் போதே அவருடன் நன்கு பழகிய அனுபவம் எனக்கு உள்ளது. நல்ல மனிதர். பண்பாளர், நேர்மையாளரும்கூட.இவர் மூத்த வழக்கறிஞராக இருந்த போது , தமிழக காவல் துறை அதிகாரி ஒருவர் தொடந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடினார்.அந்த செய்தியை நான் அப்போது பணி புரிந்த மாலை நாளிதழில் வெளியிட்டேன். அதற்கு மேல் அந்த செய்தியை வெளியிடக்கூடாது என எனக்கு எதிர்தரப்பில் இருந்து கடும் அழுத்தங்கள் தரப்பட்டன. மேலும், அந்த வழக்கு தொடர்பான சில ஆதாரங்கள் இல்லாமல் திணறிப்போன சமயம்...

    இதுபற்றி கே.சந்துரு அவர்களிடம் தெரிவித்த அடுத்த விநாடி நேரில் வந்து ஆவணங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.  அதே போல அந்த ஆவணங்களை எனக்குக்  கொடுத்தும் உதவினார். அதன் பிறகு அவர் ஆஜரான பலமுக்கிய வழக்குகள் தொடர்பான செய்திகளை நானும் சேகரித்து வெளியிட்டுள்ளேன். ஆனால் ஒருபோதும் அவர் சுய விளம்பரத்திற்காக செய்தியை வெளியிட எந்த செய்தியாளரையும் கேட்டுக்கொண்டதுகூட இல்லை.
    நீதிபதியாக பொறுப்பேற்று கொள்ளவதற்கு முன்னர், அடிக்கடி உயர்நீதி மன்ற செய்தியாளர்கள் அறைக்கு சந்துரு வந்து செல்வதுண்டு. அப்போது  அவரிடம் நீங்கள் நீதிபதியாகி விட்டால், மற்ற நீதிபதியைப் போன்று தானே இருப்பீர்கள் உங்களை அணுகுவது கடினமாகிவிடுமே என்று  வினா எழுப்பினேன். அதற்கு அவர், நான் அப்படியில்லை. இப்போது இருப்பது போலவே நீதிபதியான பிறகும் இருப்பேன் ...எப்போதும் இருப்பேன், ஆனால்,சில விசயங்களில் மட்டும் என்னால் விதிகளுக்கு உட்பட்டு நடக்க நேரிடும்  என்றும், எனினும் சாதாரணமாக யாரும்  என்னை எளிதில் அணுகலாம் என்றார்.
நீதிபதியாக பதவி ஏற்றார் சந்துரு. பதவி வந்த பிறகும் அவர் ஏற்கனவே கூறியபடி தனது சுபாவத்தை கொஞ்சம்கூட  மாற்றிக் கொள்ள வில்லை...எப்போதும் போலவே இயல்பாய் இருந்தார். ஒரு வழக்கு தொடர்பாக செய்தி வெளியிட அந்த வழக்கின் உத்தரவு நகல் ஒன்று   தேவைப்பட்டது. மதியம் அவரது அறையில் சந்திக்கச் சென்றேன். உதவியாளர் கதவை திறக்கும்போதே என்னைப் பார்த்தவர், உள்ளே வருமாறு அழைத்தார்.  உத்தரவு நகல் வேண்டும் என்று கேட்டபோது, இன்முகத்துடன் பதிலளித்த சந்துரு, உத்தரவு இன்னும் சரி பார்த்து கையெழுத்து போடவில்லை ...கையெழுத்து ஆனவுடன் தருவதாகக் கூறினார்.
        அத்தோடு நிற்காமல் உத்தரவு தயாரானதும் உதவியாளர் மூலம் அந்த நகலை  நான் இருந்த செய்தியாளர்கள் அறைக்கே கொடுத்து அனுப்பினார். அந்த அளவு அவர் மரியாதையும் மதிப்பையும் வைத்திருந்தது இப்போது எண்ணினாலும் எனக்கு ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தும். காரணம் அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
பத்திரிக்கையளர் மட்டுமல்ல, வழக்கறிஞர்களும் நீதிபதியாக இருந்த சந்துருவை எளிதில் அணுக முடியும்.  மேலும், நீதிபதியாகப் பொறுப்பேற்றவுடன் நடைமுறை வழக்கங்களில் பெருத்த மாற்றங்களைக் கொண்டு வந்தார் சந்துரு. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறையான நீதிபதியை மை லார்டு(எனது துரையே (ஆங்கிலேய கால துரை))  என்று அழைப்பதை இவர் ஏற்கவில்லை...தன்னை "சார்" என  சராசரியாக சமூகத்தில் வயதில் மூத்தவரை, பதவியில் உயர்ந்தவரை அழைப்பது போல அழைத்தால் போதும் என உறுதியாகக் கூறியிருந்தார்.
மேலும், உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு நீதிபதி தனது அறையை விட்டு நீதிமன்றத்திற்கு செல்லும் போதும், நீதிமன்றத்தில் இருந்து தனது அறைக்குத் திரும்பும்போதும் அவரது உதவியாளர் ஒருவர் அவருக்கு முன்னர் (அரசர்கள் செல்வதற்கு முன் அறிவிப்பாளர் செல்வது போல) வெள்ளி முலாம் பூசப்பட்ட கோல் ஏந்திக்கொண்டு, "உஷ் உஷ்"  என்று சத்தமிட்ட படியே செல்வதையும் நீதிபதி  கே.சந்துரு தவிர்த்து அதிலும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
மேலும் தமிழகத்தில், சென்னை உயர்நீதி மன்றத்தில் சொத்து கணக்கை வெளியிட்ட முதல் நீதிபதியும் இவர். (இவருக்கு முன்பு அகில இந்திய அளவில் சொத்துக்கணக்கை வெளியிட்ட நீதிபதி கண்ணன், தமிழகத்தைச் சேர்ந்தவர்).
எளிமையும், சமூகச் சிந்தனையும் கொண்ட நீதிபதி கே.சந்துரு நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற அடுத்த நிமிடம் அரசாங்கம் தனக்கு அளித்திருந்த வாகனம் உள்ளிட்ட அலுவலுக்கான பிற வசதிகள் அனைத்தையும் மீண்டும் நீதிமன்றத்திடமே திருப்பி ஒப்படைத்தார்.
ஒரு நீதிபதி ஓய்வு பெறும்போது பிரிவு உபச்சார விழா நடத்தப்படுவது ஒரு கட்டாய மரபு. ஆனால், அதையும் வேண்டாம் என்று தவிர்த்தவர் கே.சந்துரு. நீதிபதியாக இருந்த எந்தச் சுவடும் தெரியாமல், சக வழக்கறிஞர்களோடு வழக்கறிஞராக கலந்து பேசிய நீதிபதி கே.சந்துரு அருகில் இருந்த தேநீர்  கடைக்குச் சென்று தேநீர் அருந்தினார்.
பின்னர் ரயில் நிலையத்திற்கு ஆட்டோ ஒன்றில் சென்று மின்சார ரயிலில் வீட்டுக்குச் சென்றார். வாய்ப்பும்,  பதவியும், வசதியும் வந்தபோதும் அவை எல்லோரையும் மாற்றிவிடாது என்பதற்கு கே.சந்துரு ஒரு உதாரணம். நீதிபதி சந்துரு என்று பெயரளவில் அழைக்கப்பட்டாலும் அவர் என்றென்றும் ஒரு சிறந்த வழக்கறிஞராகவே எனக்குத் தெரிகிறார்.
அவர் ஓய்வு பெற்றநாளில் அன்றைய தினம் அவர் குறித்த செய்திகளை நான் நமது புதிய தலைமுறை தொலைக்காட்சிக்காக நேரலையில் தொகுத்து வழங்கினேன். அந்த அனுபவம் என்னால் என்றென்றும் மறக்க முடியாத ஒரு நெகிழ்ச்சி அனுபவம்.
- வி.எம். சுப்பையா