மின்சாரத்தை மிச்சப்படுத்துவது எப்படி? நிபுணர்கள் தரும் ஆலோசனை




       ரெஃப்ரிஜிரேட்டர்களும் வாஷிங் மெஷின்களும் இன்று நடுத்தர வர்க்க வீடுகளில் அத்தியாவசிய பொருளாக மாறி விட்டன. இவற்றால் பலன்கள் அதிகம் என்றாலும் மின் கட்டணத்தை அதிகரிப்பதில் இந்தச் சாதனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இதுபோன்ற சாதனங்களை வாங்கும்போதும் பயன்படுத்தும்போதும் சில யுக்திகளைக் கடைப்பிடித்தால் கணிசமான மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
     வாஷிங் மெஷின்கள் பொதுவாக குறைவான நேரமே இயங்கினாலும் இவை எடுத்துக் கொள்ளும் மின்சாரம் கொஞ்சம் அதிகம்தான். டாப் லோடிங் அதாவது மேலிருந்து துணிகளை போடும் வகையிலான இயந்திரங்களை விட முன் புறமிருந்து துணிகளை போடும் வகை இயந்திரங்கள் மூன்றில் ஒரு பங்கு மின்சாரத்தை குறைவாக எடுத்துக் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடும்பத்தின் தேவைக்கேற்ப பொருத்தமான அளவுள்ள இயந்திரத்தை தேர்வு செய்வது, தரமான டிடர்ஜென்ட் பவுடரை உபயோகிப்பது ஆகியவையும் மின்சாரத்தை சிக்கனப்படுத்த உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது புதிய தொழில்நுட்பங்களை தாங்கி நட்சத்திர குறியீடுகளுடன் வரும் வாஷிங்மெஷின்கள் மின்சாரத்துடன் தண்ணீரையும் மிச்சப்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
    பலவகையான துணிகளைப் போடும்போது பலவகையான லோடுகள் வரும். அதற்கு தகுந்தாற்போல் தண்ணீரையும் எனர்ஜியையும் இது சேமித்துக் கொடுக்கும். இப்போது வரக்கூடிய மின்சாதனங்களில் டிரான்ஸ்மிஷன் இழப்பு இருக்காது என மின்துறை நிபுணர் நல்லமருதமுத்து தெரிவித்தார்.
     வீட்டிலுள்ள மற்ற மின் சாதனங்களை போல அல்லாமல் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருப்பது ரெஃப்ரிஜிரேட்டர். எனவே இவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இவற்றை தேவையில்லாமல் அடிக்கடி திறந்து மூடாமல் இருந்தாலே இதன் மின் நுகர்வை கணிசமாக குறைக்க முடியும் என மின்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தெர்மோஸ்டாட் எனும் குளிர்ச்சியை கட்டுப்படுத்தும் பொத்தானை நடுத்தர அளவிலேயே வைத்திருப்பதும் மின் சிக்கனத்துக்கு வழிவகுக்கும். மின் கட்டணம் குறைவாக வர வேண்டுமென்றால் ரெஃப்ரிஜிரேட்டர்களில் அளவுக்கு அதிகமாக பொருட்களை திணிக்காமல் இருப்பதும் அவசியம் என்று கூறப்படுகிறது. டிஜிட்டல் இன்வர்ட்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் வரும் ரெஃப்ரிஜிரேட்டர்கள் விலை அதிகம் என்றாலும் மின் கட்டணத்தை குறைக்க இவை வெகுவாக உதவும் என்பதுடன் மற்ற வழிகளிலும் பலன் தரும் என்பது மின்துறை வல்லுனர்களின் கருத்து.
    டிஜிட்டல் இன்வர்ட்டர் பயன்படுத்துவதால் மின்சாதனத்தில் என்ன லோட் ஆகிறதோ அதை மட்டும்தான் காண்பிக்கும். வேலைக்குச் செல்பவர்கள் தினமும் காய்கறி வாங்க முடியாது. அவர்கள் வாரத்திற்கு ஒருமுறைதான் வாங்குவார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு டிஜிட்டல் இன்வர்ட்டர்கள் பயனுள்ளதாக இருக்கும் என நல்லமருதமுத்து தெரிவித்தார்.
    மின் கட்டணம் அடுக்கு முறையில் அதாவது ஸ்லாப் முறையில் கணக்கிடுப்படுகிறது. எனவே கூடுதலாக செலவழிக்கப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் மின் கட்டணத்தை கணிசமாக அதிகரிக்கச் செய்துவிடும். அதைத் தவிர்க்க நிபுணர்கள் தரும் இது போன்ற ஆலோசனைகளை கடைப்பிடிப்பது மூலம் வீட்டு பட்ஜெட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
  -P.V.உமாதேவி