ஆழ்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது பிரதீபா கப்பல்

    நீலம் புயலால் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தரை தட்டிய பிரதீபா காவேரி கப்பல் ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
கப்பல் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், கடல் வாணிபக் கழகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட உள்ளது. மீட்பு பணிகளை இன்று நேரடியாக பார்வையி்ட்ட மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன், உயிரிழந்த கப்பல் ஊழியர்களுக்கு நீதிமன்ற வழிகாட்டுதல் படி நிவாரணம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கை வந்த பின்னர், கப்பல் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மீட்கப்பட்ட கப்பலை எங்கு நிறுத்துவது என்பது குறித்து நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்த ஜி.கே. வாசன், தற்போதைய நிலையில் சென்னை துறைமுக எல்லைக்குள் நிறுத்தப்படும் என்று கூறினார். மேலும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். தரை தட்டிய கப்பலை மீட்கும் பணி கடந்த புதன்கிழமை தொடங்கியது. கப்பலின் முன் பகுதியில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், பின் பகுதியில் இருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. கப்பல் மீட்புப் பணியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கடற்கரையில் குவிந்திருந்தனர். பிரதீபா கப்பலை மீட்கும் முயற்சியில் மாளவியா கப்பல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

-காஸ்டியும் சுரேஷ்