பெண்கள்…… குற்றவாளி கூண்டில் தமிழ் சினிமா


அண்மையில் நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் நடந்த ஒரு கொடூர சம்பவம், நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பெண்களுக்கெதிராக செய்யப்படும் இது போன்ற கொடுஞ்செயல்களிற்கு காரணிகளாக இருக்கும் விஷயங்களில் சினிமாவிற்கும் முக்கிய பங்குண்டு. அந்த வகையில் பெண்களின் சுதந்திரம் குறித்து, பெண்களின் சுயமரியாதை குறித்து, தமிழ் சினிமா எந்தளவிற்கு பேசியிருக்கிறது என்பது பின்வருமாறு:-
"பெண் மீது ஆண் புரியும் அடக்குமுறையானது, உயர் சாதிக்காரன் கீழ் சாதிக்காரன் மீதும், பணக்காரன் ஏழை மீதும், வெள்ளையன் கருப்பன் மீதும் செய்யும் அடக்குமுறைகளை விட அநியாயமானது" இது பெரியோர் கூற்று...
சமூகத்தில் பெண்களை ஓர் போகப் பொருளாக மட்டுமே கருத வைத்ததில் சினிமாவின் பங்கு அலாதியானது. இத்தனை ஆண்டு கால தமிழ் சினிமாவில், பெரும்பாலும் திரைக்கு முன்னால் பெண்களின் வேலை சதை வியாபாரம் செய்வது மட்டுமாகவே இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் பெண்களின் உணர்வுகளை மதித்து, அவர்களை பிரதான கதாபாத்திரங்களாகக் கொண்டு பல படங்களை இயக்கிய இயக்குநர் கே.பாலச்சந்தர், 1974-யில் வெளியான அவரின் 'அவள் ஒரு தொடர் கதை' கவிதா தான் இன்றளவும் குடும்ப சிக்கல்களிலும் , சமூக சிக்கல்களிலும் சிக்கி தவிக்கும் பெண்களுக்கு ஓர் முன் மாதிரி.
அன்றைய காலங்களில் பாலச்சந்தரின் படங்கள் முற்போக்கு சிந்தனை மிகுந்த படங்களாக இருந்தன. அவரின், அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவர்கள், சிந்து பைரவி, புது புது அர்த்தங்கள் உட்பட பெரும்பாலான படங்கள் பெண் சுதந்திரம், பெண்களின் உணர்வுகள், அவர்களின் சமூக பார்வை, அவர்கள் மீது சமூகத்திற்கு இருக்கும் பார்வை, என பெண்ணியம் பேசின.
தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் படங்கள் தவிர்த்து, பெண்ணியம் பேசிய படங்கள் மிக அரிதாகவே வெளி வந்துள்ளன. 'கணவனே கண் கண்ட தெய்வம்' , 'புல்லானாலும் புருஷன், கல்லானாலும் கணவன்' போன்ற பழமொழிகளைவிட பெண்களுக்கு எதிரான வன்சொற்கள் இருக்க முடியாது.
இன்றும் சந்தேகம் என்ற கொடிய நோய் தாக்கிய கணவன்மார்களோடு, முள்படுக்கையில் படுத்து, குடும்பம் நடத்தும் பெண்கள் ஏராளம். அப்படியான பெண்களின் நிலையை பதிவு செய்து, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக ஒவ்வொரு பெண்ணும் மாற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது பாரதிராஜாவின் 'புதுமைப் பெண்'.
பெண்களை காமத்தோடு மட்டுமே பார்க்க தெரிந்த சில ஆண் கண்கள் குறித்தும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்காக தன் குடும்பத்தையே எதிர்த்து போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் பதிவு செய்தது 1994-ல் வெளியான பிரியங்கா திரைப்படம்.
சாதிப் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை என பல தளங்களிலும் பயணித்த 'இந்திரா', பெண் சுதந்திரம் குறித்தும் சில விஷயங்களை பதிவு செய்தது. அனுஹாசன், அரவிந்த்சாமி, நாசர் போன்ற பலர் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சுஹாசினி மணிரத்னம்.
ஐ.டி வேலை... கைநிறைய சம்பளம் என பெண்களின் நிலை பெரிய மாற்றத்திற்கு உட்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும், இன்றும் பல பெண்கள் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட தங்களின் மேலதிகாரிகளின் தொல்லைகளில் சிக்குண்டு, தவித்து வருகின்றனர்.
இப்படி அலுவலகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவை கலந்து சொன்ன படம் ’மகளிர் மட்டும்’. திரைப்படங்களில் ஒரு ஹீரோ செய்யும் அனைத்து சாகசங்களையும், ஒரு பெண்ணாக செய்து அசத்தியவர் நடிகை விஜயசாந்தி.
தெலுங்கில் இவர் நடித்த கர்தவ்யம் என்ற படம், தமிழில் வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற பெயரில் வெளியானது. அது தொடர்ந்து பல படங்களிலுமே விஜயசாந்தி ஒரு பெண் ஹீரோவாகவே சித்தரிக்கப்பட்டார். இந்தப் படங்கள் மட்டுமின்றி...இன்னும் சில படங்களின் கதாபாத்திரங்களும் பெண் விடுதலை குறித்தும், பெண்ணியம் குறித்தும் பேசியிருந்தாலும் கூட...
பெண்களின் உண்மை நிலை, பெண்களின் சமூக அந்தஸ்த்து மற்றும் பெண்ணுரிமைகள் குறித்த முழுமையான படைப்புகள் இதுவரையிலும் தமிழில் வெளியாகவில்லை என்பதே உண்மை.
சினிமா என்பது ஒரு தொழில் தான் என்றாலும். அதன் தாக்கம் சமூகத்தின் மீது மிகப் பெரியது என்பதால் சினிமாவிற்கு அதீத பொறுப்புகள் உண்டு. பெண்களை வெறும் கவர்ச்சி பொருளாக மட்டுமே காட்டி, வன்புணர்ச்சி உணர்வுகளை தூண்டும் சினிமாவும் அதை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகருமே கூட குற்றவாளிகள் தான்.
பெண் என்பவள் சக மனுஷி. ஆணுக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல என்ற உண்மையை சமூகத்திற்கு உணர்த்த, சினிமாவும் தன் வகையில் உதவ வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
                                                      -ஹாட் ஸ்பாட் நரேஷ்