பழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு: வேளச்சேரி பகுதி வாசிகள் கொதிப்பு.......!Pasumai Nayagan www.thagavalthalam.com பசுமை நாயகன்
   

       வேளச்சேரியில், பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில், அடர்த்தியான மரங்கள் அதிகம் கொண்ட மண்டலமாக அடையாறு மண்டலம் திகழ்கிறது. அடையாறு தியாசோபிகல் சொசைட்டி, ஐ.ஐ.டி., ராஜ்பவன், சிறுவர்பூங்கா, அண்ணாபல்கலை ஆகியவற்றில் ஏராளமான மரங்கள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் குடியிருப்புகள், சாலையோரங்களிலும், அதிப்படியான மரங்கள் உள்ளன.கண்டனம் இந்த பகுதியில், பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தற்போது நடக்கிறது. அந்த இடங்களில், சாலையோரம் உள்ள பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன.

      இதற்கு மாநகராட்சியும் அனுமதியளித்து வருகிறது. சமீபத்தில், வேளச்சேரி, ராணி தெருவில் வெட்டப்பட்ட பிரம்மாண்ட மரம் ஒன்று பெரும் சர்ச்சையாகி வருகிறது. மரம் வெட்டப்பட்டதற்கு, பல்வேறு நலச்சங்கத்தினர் மற்றும் சமூகநல விரும்பிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூகநல விரும்பிகள் கூறியதாவது.


       வேளச்சேரி, ராணி தெருவில் இருந்த மரம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஒரு மீட்டர் விட்டம் கொண்ட இந்த பசுமையான மரம் அடியோடு வெட்டப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுத்தனர் என்றே தெரியவில்லை. 'விசாரிக்கவும்' எங்கள் விசாரணையின்படி இந்த மரம் வெட்டுவதற்கு சில லட்சங்கள் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரம் வெட்ட அனுமதி கொடுத்தது யார். அந்த மரத்தை வெட்ட பணம் கைமாறியதா என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரி மோகனை அலைபேசியில் அழைத்தபோது, அவர் பதிலளிக்கவில்லை.

                                                                                        -பசுமை நாயகன்