காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும்

thagavalthalam cauvery


        காவிரி மேலாண்மை வாரியம் 4 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ், சிபிஐ, தாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ளன.
காவிரியில் 50 டிஎம்சி நீர் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி மேற்பார்வை குழுவை தமிழகமும் கர்நாடகாவும் எதிர்க்கின்றன. எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியம்தான் இறுதித் தீர்வாக இருக்கும் என்று கூறியதோடு, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ளன.
காங்கிரஸ்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இந்த உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி சற்றும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தாமக
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தமாகா தலைவர் வாசன் வரவேற்பு அளித்துள்ளார். அதே நேரத்தில் கர்நாடகாவில் உள்ள தமிழர்களை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கர்நாடகாவில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்றும் ஜி.கே வாசன் கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி
மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய தமிழர்களுக்கு ஆறுதலைத் தரக் கூடிய ஒரு தீர்ப்பை பெற்றுத் தர உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கனவில் இருக்கிறது பாஜக.
இதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் மத்திய அரசு தாமதிக்க வாய்ப்பிருக்கிறது அல்லது கர்நாடகாவுக்கு சாதகமான ஒரு குழுவை அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகையால் உரிய வழிகாட்டுதல்களின்படியும் உச்சநீதிமன்ற உத்தரவின்படியும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்திட உரிய அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளிலும் வஞ்சித்தே வரும் மத்திய அரசு, மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் எந்த ஒரு இழுத்தடிப்பையும் மேற்கொள்ளக் கூடாது. தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை நிலைநாட்டுவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி மத்திய பாஜக அரசு அமைத்திட வேண்டும்.
இதற்கான அழுத்தங்களை மத்திய அரசுக்கு தமிழர்கள் நாம் ஒருங்கிணைத்து கொடுக்க வேண்டும். காவிரி ஆற்று நீர் விவகாரத்தில் நமக்கான உரிமையை வென்றெடுக்கும் இறுதித் தருணம் இது. அத்தனை மாச்சரியங்களை கடந்து தமிழராய் ஓரணியில் நின்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒருமித்த குரல் கொடுப்போம் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
விவசாய சங்கங்கள்
அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர். பாண்டியன், உடனடியாக தமிழக அரசு பிரதமர் மோடியை சந்தித்து மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இது தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு நியாயத்திற்கு கிடைத்த வெற்றி என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் மன்னார்குடி ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்று நாகை மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் அங்குள்ள மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
Source:oneindia