டி கே ராஜேந்திரன் சட்டம் ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி யாகவும் உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி யாகவும் பொறுப்பு


 T K R & GEORGE Thagavalthalam News




  சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன், சட்டம் - ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி-யாகவும், உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி (கூடுதல் பொறுப்பு) ஆகவும் நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனராக மீண்டும் பொறுப்புக்கு வந்திருக்கிறார் எஸ்.ஜார்ஜ்.



    டந்த சட்டமன்றத் தேர்தலின்போது, சென்னையின் போலீஸ் கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் இருந்தார். ‘குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள், முக்கியப் பொறுப்புகளில் இருந்தால், தேர்தல் நியாயமாக நடக்காது’ என்று அப்போது தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., புகாராக அளித்தது. அந்தப் பட்டியலில் அப்போது இருந்த முதல் பெயர் டி.கே.ஆர். தேர்தல் ஆணைய நடவடிக்கையாக டி.கே.ஆர் விடுப்பில் போனார். சென்னைக்குத் தற்காலிக போலீஸ் கமிஷனராக டி.கே.ஆருக்குப் பதில் மீண்டும் ஜார்ஜ் அல்லது பழைய கமிஷனர் திரிபாதி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராதவகையில் அசுதோஷ் சுக்லா, சென்னை போலீஸ் கமிஷனர் ஆனார். தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக வந்ததும், மீண்டும் டி.கே.ஆர்., சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டார். பழைய சென்னை போலீஸ் கமிஷனர்கள் திரிபாதி, ஜார்ஜ் போன்றோர் அப்போது பவர் இல்லாத இடங்களில் இருந்தனர். பணி நீட்டிப்பிலேயே மீண்டும் மீண்டும் டி.ஜி.பி-யாக வலம்வந்த கு.ராமானுஜம் போன பின்னர், அந்த இடத்துக்கு வந்தவர் அசோக்குமார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவரும் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் அரசு, அவருக்குப் பணி நீட்டிப்பை அளித்து மீண்டும் டி.ஜி.பி ஆக்கியது.

TKR IPSThagavalthalam News

கு.ராமானுஜத்துக்கு அளித்த பணி நீட்டிப்பால், நரேந்திரபால் சிங் உள்ளிட்ட பல டி.ஜி.பி-கள் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி என்ற கம்பீரமான மாநில அதிகாரப் பொறுப்புக்கு வர முடியாமலேயே போய்விட்டது. அசோக்குமாருக்கு அளித்த பணி நீட்டிப்பால், சில மாதங்களுக்கு முன் சத்தமே இல்லாமல் நரேந்திரபால் சிங்போல வீட்டுக்குப்போன இன்னொரு டி.ஜி.பி., முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனரான சேகர். ஆட்சியாளர்கள் விருப்பத்தைப் பொறுத்தே போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர் போன்ற பதவிகள் அலங்கரிக்கப்படுவதால்... அந்தப் பதவிகளுக்கு வருகிறவர்கள் தலைமீது எந்த நேரமும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டே இருப்பது கண்கூடு. பணி ஓய்வுபெற மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள ஒருவரை, போலீஸ் டி.ஜி.பி ஆக்கி... அந்த மூன்று மாதங்கள் முடிந்ததும் அவருக்கு மேலும், இரண்டாண்டுகள் பணி நீட்டிப்பு கொடுப்பது மாநில அரசுகளின் எண்ணவோட்டத்தைப் பொறுத்தே எல்லாக் காலங்களிலும் அமைந்துள்ளது.

தி.மு.க ஆட்சிக் காலத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் கே.பி.ஜெயின். அவர் பணி ஓய்வுபெற மூன்று மாதங்கள் இருந்த நிலையில், திடீரென விருப்பத்தின்பேரில் அவர் விடுமுறையில் செல்வதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. அடுத்து, சீனியாரிட்டி முறையில் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக வரவேண்டியவர் நட்ராஜ் (தற்போது இவர், அ.தி.மு.க எம்.எல்.ஏ). ஆனால், தி.மு.க அரசு, தமிழ்நாட்டின் முதல் பெண் டி.ஜி.பி-யாக ஒரு பெண்ணை நியமிப்பதாகச் சொல்லி லத்திகா சரணை நியமித்தது. நட்ராஜ் தீர்ப்பாயத்துக்குப் போனார். 

‘‘டி.ஜி.பி அந்தஸ்து ‘பேனலில்’ லத்திகா சரண் இருப்பதால், நாங்கள் தலையிட முடியாது. யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது அரசின் கொள்கை முடிவு’’ என்றது தீர்ப்பாயம்.
போலீஸ் கமிஷனர்கள், டி.ஜி.பி-க்கள் மாற்றப்படுவதற்கும், விடுமுறையில் வீட்டுக்குப்போவதாகச் சொல்லிவிட்டும், சொல்லிக்கொள்ளாமலும் போவதும் காலந்தோறும் நடந்து வருவதுதான். மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனராகியுள்ள ஜார்ஜுக்கு கருணாநிதி நள்ளிரவு கைது ஆபரேஷன், முரசொலி மாறன் உள்ளிட்ட தி.மு.க-வினர் மீதான நடவடிக்கை... என்று ஆளும் அ.தி.மு.க-வுக்கான ‘நெஞ்சைத் தொடும்’ விஷயங்கள் நிறைய அணிவகுக்கின்றன. 
‘‘புதிய டி.ஜி.பி-யாகப் பொறுப்பேற்றிருக்கும் டி.கே.ஆருக்கு ஏற்கெனவே ஆளும் கட்சிக்கு ஆதரவாக ‘சாதித்த’ பல விஷயங்கள் அவர்களின் குட் லிஸ்ட்டில் இருந்தாலும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை வெற்றித் தேர்தலாய் நடத்தித் தர முன்கூட்டியே கொடுக்கப்பட்ட பரிசுதான் டி.ஜி.பி பதவி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

George IPS Thagavalthalam Newsடி.ஜி.பி., கமிஷனர் என்று பெரிய பல பதவிகளே இப்படியும் அப்படியுமாய் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சத்தமே இல்லாமல், சென்னையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அருணாச்சலமும் மாற்றப்பட்டு டிரான்ஸ்போர்ட் விஜிலென்ஸ் கமிஷனராகத் தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். ‘‘சி.சி.பி-க்கு (மத்திய குற்றப் பிரிவு) இவர் வந்த பின்னால் மொத்த வருமானமும் சுத்தமா கையைவிட்டுப் போயிடுச்சு. மொத்தத்துல இங்கிருந்து கிளம்பினால் சரி’’ என்று சாபத்தை வாங்கிப்போகும் அளவுக்கு இருந்திருக்கிறார் அருணாச்சலம்.
கமிஷனர், டி.ஜி.பி போன்ற பதவிகளுக்குப் புதியவர்கள் வந்தது எப்படி என்ற தகவலைப்போல், ‘டி.ஜி.பி ஏன் விடுப்பில் போனார்’ என்பதற்கும் காரணத்தைச் சொல்கிறார்கள் போலீஸ் ஏரியாவில்.

‘‘திமுக ஆட்சிக்கு வந்தால் காவல் துறையில் யார், யாரை எங்கே நியமிக்கலாம் என்ற அளவுக்கு மிகவும் வேக வேகமாக மாதிரி போஸ்டிங் லிஸ்ட் ஒன்றை முக்கியமான ஓர் அறிவாலய குரூப் தயாரித்துக் கொண்டிருந்தது...
அவர்கள், தலைமை தங்களுக்கான ‘அஜென்டா’ படி அதைத் தயாரித்தார்கள். அதில், தவறு ஏதுமில்லை. ஆனால், இரண்டாண்டு பணி நீட்டிப்பைக் கொடுத்த அ.தி.மு.க-வுக்கு விசுவாசத்தைக் காட்ட வேண்டிய அசோக்குமார், அதை அறிவாலயத்துக்குக் காட்டிவிட்டார். ஜெயலலிதா முதல்வரானதும் இதுகுறித்து வந்த புகார்களைக் காட்டி அசோக்குமாரிடமே விளக்கம் கேட்டார். அசோக்குமாரோ, “இது அப்பட்டமான பொய்” என்று கூறிச் சமாளித்துவிட்டார். ஆனால், சத்தமே இல்லாமல் அவருக்கு ‘இன்ட்’ மூலம் கிடைத்த தகவலால் அசோக்குமார் சொன்னதெல்லாம் பொய் என்று தெரியவந்தது. அவர் வீட்டுக்குப் போனார்... டி.கே.ஆர் அந்த இடத்துக்கு வந்தார்” இதுதான் நடந்த கதை என்றனர்.


சசிகலா புஷ்பாவை ஆஃப் செய்ய... ‘கனிம’ முதலாளியின் மனம் குளிர எனப் பல விஷயங்கள் பச்சமுத்து கைது விவகாரத்தில் பயணித்தாலும், எங்கேயும் பிசிறடிக்காமல் அதில் நுட்பமாகச் செயல்பட்டதில் கமிஷனருக்கு ஒரு பூங்கொத்து... பா.ம.க-வின் பாலு, கார்டனுக்கு வந்துபோனதே பச்சமுத்து கைது தொடர்பான ஃபைலை கொடுத்துவிட்டுப் போகத்தான் என்று மேட்டரை லீக் செய்து பா.ம.க ஏரியாவைக் குளிரவைத்ததில் சிட்டி உளவுப் பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணனுக்கு ஒரு பூங்கொத்து என்று மலர்களால் போலீஸ் ஏரியா மணமணக்கிறது.